தமிழகத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் - வேல்முருகன் பேட்டி
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது இருப்பினும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் 400 த்திற்கும் மேற்பட்ட நபர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துக்கொண்டு புதிதாக கட்சியில் இணைந்த நபர்களை கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்றதை அடுத்து தனியார் திருமண மண்டபம் வெளியே காவல்துறையினர் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது, இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகிய நபர்கள் இணையும் நிகழ்வு நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியில் இருந்த மாநில மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் இன்று அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளனர்.
இன்று கட்சியில் புதிதாக இணைந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை முன் எடுத்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியில் நீங்கள் எல்லாம் இணைந்துள்ளது என்பது கட்சிக்கு வலுசேர்க்கும் கட்சி வேகமாக வளரும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியல் வேகமாக வளர்த்து வருகிறது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து சென்னையில் ஆலோசனைகள் மேற்கொண்டு கூட்டு முயற்சியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயல்படும். தமிழ் தேசிய அமைப்புகளை விமர்சனம் செய்யாமல் மாற்று அரசியலை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். நம்மை திசை திருப்ப சங்கி கூட்டம் காத்துக்கொண்டுள்ளது. 234 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
அதிமுக என்பது மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று பல்வேறு குழுவாக இயங்கி வருகிறது. சிறந்த ஆளுமையாக உள்ள கட்சிகளை பாஜக கட்சி வருமான வரித்துறை மற்றும் அமலக்கத்துறை வைத்து இணைய முயற்சி செய்கிறது. மோடியை செங்கோட்டையன் பாராட்டுவதை வைத்து மட்டும் எதுவும் சொல்லி விட முடியாது என தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது என்ற அளவில் இல்லை பாலியல் ரீதியான தொல்லைகளை கட்டுபடுத்த வேண்டும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. வன்கொடுமைகளில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என தெரிவித்தார்.
7 கோடி மக்கள் வாழும் பகுதியில் அங்கங்கே பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்திய முழுவதும் அதிகமாக பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. செல்போனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது ஆபாச படங்கள் வருகிறது. அதனால் இளைஞர்கள் போதை கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் என தெரிவித்தார்.
டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் இருபது ரூபாய் கூடுதலாக வாங்குவது என்பது பத்திரிகைகள் மற்றும் தங்கள் கட்சிகள் நேரடியான கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான முறைகேட்டில் ஆயிரம் கோடியா 5000 கோடியா பத்தாயிரம் கோடியா என்பதை நேர்மையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு டாஸ்மாக்கள் நடைபெறக்கூடிய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு தவறு இழைத்தவர்கள் மீது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.
சாதி ரீதியாக நடைபெறக்கூடிய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்து திருத்துவதற்கு உரிமை இருந்தது. ஆனால் அம்மையர் ஜெயலலிதா ஆட்சியில், தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் விளைவு வகுப்பறையில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை முறைபடுத்தும் நிலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பள்ளிகளில் அந்த நிலை இல்லை அது மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் கையில் பிரம்பு இருந்தால் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு ஒழுங்கு படுத்துவதற்கு என்ற அளவில் இருக்கும். பள்ளி மாணவர்களே போதைக்கு அடிமையாகி வகுப்பறையில் ஆசிரியர்கள் கத்தியால் குத்துகிறார்கள், சாதி சங்க தலைவர்கள் அழைத்து வந்து மிரட்டுகிறார்கள், பள்ளி வகுப்பறையில் சாதி பெயரை எழுதுகிறார்கள். தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அந்த பெயரை அழித்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் மதத்தின் பெயரால் பள்ளிவாசல் மீது மசூதிகள் மீது கோலி பண்டிகை போது காவல்துறை பாதுகாப்போடு இஸ்லாமியர்கள் மீது வண்ணப் பொடிகளை தூவி உள்ளனர். அதற்கு உடன்படாத நபரை கொலை செய்துள்ளனர். ஒரு சங்கி பரிவார் ஆட்சியை இந்த தேசத்திற்கு ஆளுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
ஒரு மத்திய அரசு வேலைக்கு 10 சதவீத குறிப்பிட்ட நபர்கள் மட்டும்தான் செல்ல முடிகிறது 90% மாநிலம் சார்ந்த மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறினார். குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நபர்களை கொண்டாடுகின்ற போற்றுகின்ற எவரையும் ஆதரிக்க முடியாது அதனை கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.
What's Your Reaction?






