DMK Women Executive Atrocity in Polica Station in Thousand Lights : ஆயிரம் விளக்கு பகுதியில் நேற்று இரவு ஒரு மணி அளவில் 17 வயது சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது போலீசார் சோதனை செய்துள்ளனர். சிறுவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், காலையில் காவல் நிலையத்திற்கு வந்து, வாகனத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி உள்ளனர்.
இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற சிறுவன் அவரது தாயிடம் கூற, அவரது தாய் வெற்றிச்செல்வி என்பவர் நள்ளிரவு நேரத்தில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்குள் புகுந்து, தான் திமுக நிர்வாகி எனக்கூறி எனது மகனிடமே இருசக்கர வாகனத்தை பிடுங்குவீர்களா? எனக் கூறி போலீசாரிடம் நள்ளிரவு நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
எழுதிக் கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு போலீசார் கூற எழுதித் தர முடியாது என வெற்றிச்செல்வி கூறியுள்ளார். மேலும், காவலர் எழுதிக் கொடுத்த விளக்க கடிதத்தையும் கிழித்துப் போட்டுவிட்டு உங்களால் என்ன செய்ய முடியுமோ பார்த்துக் கொள்ளுங்கள்? நான் திமுக நிர்வாகி எனக்கூறி இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
போலீசார் விசாரணையில் வெற்றிச்செல்வி திமுக மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைமை குழு உறுப்பினர் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.