Nishad Yusuf: சூர்யாவின் கங்குவா பட எடிட்டர் நிஷாத் யூசுஃப் திடீர் மரணம்... அதிர்ச்சியில் படக்குழு!
சூர்யா நடித்துள்ள கங்குவா நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுஃப் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சி: சூர்யாவின் கங்குவா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுஃப் திடீரென உயிரிழந்தது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த நிஷாத் யூசுஃப், மலையாளத்தில் பல படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.
ஆபரேஷன் ஜாவா, தள்ளுமாலா, சவுதி வெள்ளக்கா, மம்முட்டி நடிப்பில் வெளியான ஒன் (One), சாவீர், ராமச்சந்திர பாஸ் & கோ, அலங்கம், அடியோஸ் அமிகோ, எக்சிட் போன்ற பல படங்களில் நிஷாத் யூசுஃப் தான் எடிட்டராக பணியாற்றியுள்ளார். இதில் தள்ளுமாலா படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான கேரள மாநில அரசின் விருதை வென்றுள்ளார். தற்போது மோகன்லால், மம்முட்டி, தருண் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள பாசூக்கா படத்தையும் எடிட் செய்து வந்தார். இந்நிலையில் கொச்சின் அடுத்த பனம்பள்ளியில் உள்ள அவரது பிளாட்டில் உயிரிழந்தவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிஷாத் யூசுஃப் உயிரிழந்தது நள்ளிரவு 2 மணி என சொல்லப்பட்டாலும், அவரது மறைவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 43 வயதே ஆன நிஷாத் யூசுஃப் மறைவு மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ரசிகர்களும் நிஷாத் யூசுஃப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நிஷாத் யூசுஃப் பங்கேற்றிருந்தார். அப்போது சூர்யா, பாபி தியோல் ஆகியோருடன் அவர் எடுத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
கங்குவாவை தொடர்ந்து சூர்யாவின் அடுத்தப் படத்துக்கும் நிஷாத் யூசுஃப் எடிட்டராக கமிட்டாகி இருந்தார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியானது. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருந்தது. இந்நிலையில், நிஷாத் யூசுஃப் திடீரென உயிரிழந்தது சூர்யா 45 படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிஷாத் யூசுஃப் மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?