“அந்த துப்பாக்கி... விஜய் இடத்தில் நானா..? அமரன் பட ப்ரோமோஷனில் ஜெர்க்கான சிவகார்த்திகேயன்!
கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் சொன்ன பதில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நாளை மறுதினம் (அக்.31) வெளியாகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை, கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் மூவியாக உருவாகியுள்ள அமரன், சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகும் அமரனுக்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதரபாத், மும்பை என பல இடங்களில் அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று கோவையில் அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சிவகார்த்திகேயனை பார்த்து, இனிமேல் விஜய் இடத்தில் நீங்கள் தான் என ரசிகர்கள் குரல் எழுப்பினர்.
அதாவது விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இரண்டு நிமிடம் வரும் அந்த காட்சியில், சிவகார்த்திகேயனுக்கு ஒரு துப்பாக்கியை கொடுக்கும் விஜய், இனி நீங்கள் தான் மக்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பார். விஜய் அரசியலில் பயணிக்கவுள்ளதால், சினிமாவில் அவரது இடத்திற்கு சிவகார்த்திகேயன் வருவார் என்பதாக அந்தக் காட்சி இருந்தது. கோட் வெளியானது முதலே கோட் படத்தின் இந்த சீன் பற்றி பலரும் சிவகார்த்திகேயனிடம் கேட்டு வருகின்றனர்.
விஜய் கொடுத்த துப்பாக்கியின் வெயிட் எப்படி இருக்கிறது எனக் கேட்க, அது ஹேண்டில் செய்வதை பொறுத்து என சிவகார்த்திகேயன் பதில் கொடுத்து வந்தார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் விஜய்யின் மூதல் அரசியல் மாநாடும் முடிந்துவிட்டது. அதற்கு சிவகார்த்திகேயனும் வாழ்த்துக் கூறியிருந்தார். அதுமட்டும் இல்லாமல் விஜய் தற்போது தனது கடைசிப் படத்தில் நடித்து வருகிறார். அதனால் இனிமேல் விஜய்க்கு பதிலாக அவரது இடத்தில் சிவகார்த்திகேயன் தான் என, கோவை நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூச்சலிட்டனர்.
இதனால் ஜெர்க் ஆன சிவா, “ரசிகர்கள் அந்த துப்பாக்கி சீன் பத்தி சொல்றாங்க. கோட் படத்தில் வரும் ஒரு சீன் தான் அது, அதுக்குள்ள வேற எதுவும் இருக்குறதா நான் பார்க்கல... சினிமாவில் நடந்த ஒரு அழகான நிகழ்வாக தான் பார்க்கிறேன். விஜய் ஒரு சீனியர் ஆக்டர், அவரு என்கூட ஸ்க்ரீன் ஷேர் பண்ணது ரொம்ப அழகா இருந்தது. ஆனால் நான் சினிமாவில் இன்னும் சாதிக்க நிறைய இருக்கு, அதனால் விஜய் இடத்தில் நான் கிடையாது” என சிரித்தபடி பதில் கொடுத்தார். விஜய் ரூட்டில் சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் சிவகார்த்திகேயன் வருவாரா என ரசிகர்கள் கேட்டனர். அதற்கும் சிவகார்த்திகேயன் ‘வாய்ப்பே இல்ல ராசா’ என்பதாக கிரேட் எஸ்கேப் ஆனது குறிப்பிடத்தக்கது.
கோட் படத்தில் ஆரம்பித்த இந்த துப்பாக்கி பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமரன் படத்தின் டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், சிபி சக்கரவரத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பாஸ் படத்தின் படப்பிடிப்பு, டிசம்பரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுதாகொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பும் டிசம்பரில் தொடங்குமென கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?