மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை
மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழாவும், 62வது குரு பூஜையையும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்காக நேற்றிரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சுற்றுலா மாளிகையில் தங்கினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை கோரிப்பாளையத்தில் உள்ள 20 அடி உயர வெண்கலத்திலான பசும்பொன் தேவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் சாலை மார்க்கமாக மதியம் 1.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்படுகிறார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ ஆகியோரும் மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக புறப்பட்டுச் சென்றார். மேலும், மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மதிமுக சார்பில் MP. துரை வைகோ மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் முத்துராமலிங்க தேவர் வெற்றிப் பெற்றார், சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் தளபதியாக முத்துராமலிங்க தேவர் விளங்கினார், தமிழ், ஆங்கிலம் இலக்கணத்தில் சொற்பொழிவு ஆற்றுவதில் முத்துராமலிங்க தேவர் புலமை பெற்றவர், சாதி, மதத்திற்கு அப்பாற்றப்பட்ட தலைவராக முத்துராமலிங்க தேவர் திகழ்ந்தார் எனக் கூறினார். இதனிடையே முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, அமைச்சர்கள் ரகுபதி, தா.மோ. அன்பரசன், சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் முத்துராமலிங்கத் தேவரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
What's Your Reaction?