Diwali 2024: சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்... ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னையில் பணிபுரிந்து வரும் வெளியூர்வாசிகள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இன்று பேருந்துகள், ரயில்களில் மிகவும் அதிகமான கூட்டம் இருக்கும் என்பதால், நேற்று (அக்.29) மாலையில் இருந்தே ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து கிளம்பிவிட்டனர்.
இதன் காரணமாக சென்னையை அடுத்த தாம்பரம், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரேநேரத்தில் அதிக அளவிலான பயணிகள் குவிந்தனர், மேலும் அவர்கள் சிறப்பு பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர். கிளாம்பாக்கம் மட்டுமின்றி கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பேருந்து முனையத்தில் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக இணைய சேவை பாதிக்கப்பட்டதால், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். அதேநேரம் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில், சிலவை மட்டுமே வேலை செய்ததால் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பணத்தை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், நடைமேடையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், அவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகள் முறையாக அறிவிக்கவில்லை என்றும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் சென்றதால் தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையுடன் வார விடுமுறை நாட்களும் சேர்ந்து வருவதால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் ஒரேநேரத்தில் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்க்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார், வேன், அரசு, தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனம் ஆகியவை அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகளும் பயணிகளும் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் பல்லாவரம், குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்துகள், ரயில்கள், வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் (அக்.28) ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். இந்நிலையில், இன்று மதியம் முதல் சென்னையின் பல பகுதிகளிலும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து சென்னை உட்பட அதன் சுற்றுப்புர பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?