Kamala Harris : ”என் தாய் தைரியமானவர்... என் தந்தை ....” சிகாகோ மாநாட்டில் கமலா ஹாரிஸ் எமோஷனல்!
Kamala Harris Tribute To Her Indian Mother in Chicago Conference : அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ஜனநாயகக் கட்சி சார்பில் சிகாகோவில் நடந்த தேசிய மாநாட்டில் அக்கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் தனது தாயை நினைவுகூர்ந்து உரையாற்றியது கவனத்தை பெற்று வருகிறது.

Kamala Harris Tribute To Her Indian Mother in Chicago Conference : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் சூழலில், பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. நவம்பர் 5 ஆம் தேதி நடக்கவிருக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். இருவரும் சமபலத்துடன் இருந்துவருவதால் கடும்போட்டி நிலவுவதோடு கருத்துக்கணிப்புகளிலும் இருவருக்கும் 50 – 50 வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றன.
கமலா ஹாரிஸிற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆதரவு அதிகளவில் இருந்து வருகிறது. மறுபக்கம் டொனால்டு டிரம்பிற்கு முன்னணி உலக பணக்காரரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிகாகோ நகரத்தில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் இறுதி நாளில் அமெரிக்காவுக்கு ஒரு பாதையை உருவாக்கும் வாய்ப்பு வந்துள்ளதாகவும், தனது தாய் குறித்தும் அக்கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், கட்சி, இனம், பாலினம், மொழி என பிரிவினைகளை கடந்து இன்று தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக தேர்வாகியுள்ளதாகவும், இந்த தேர்தலின் மூலம் அமெரிக்காவிற்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கமலா ஹாரிஸ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த கால கசப்புகள், சந்தேகங்கள், பிரிவினைகள் என அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு ஒரு புதிய பாதையை நோக்கி முன்னேறக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, டிரம்ப் அதிபராக இருந்த நேரத்தில் தனது அதிகாரத்தை சொந்த நலனுக்காக மட்டுமே பயன்படுத்தினார் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார் கமலா ஹாரிஸ்.
அரசியல் குறித்து பேசிய அவர், தனது குடும்பம் குறித்தும் மக்களுடன் பகிர்ந்து கொண்டார். ஜமைக்கா வம்சாவளியான தனது தந்தை துணிச்சல்காரர் என்றும், இந்திய வம்சாவளியான தனது தாய் தைரியமானவர் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல், அநீதியைக் கண்டு புகார் கூறாமல் அதன்மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது தாய் சொல்லிக்கொடுத்து வளர்த்ததாகவும் கமலா ஹாரிஸ் பெருமிதமாக தெரிவித்தார்.
இறுதியாக, தான் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால், நாட்டின் ஒற்றுமைக்காகவும், எதிர் காலத்துக்காகவும் போராடுவேன் என்று தெரிவித்தார்.
சிகாகோவில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டின் இறுதி நாளில் கமலா ஹாரிஸ் பேசிய உரை கவனத்தை பெற்று வருகிறது.
What's Your Reaction?






