வன்முறையில் முடிந்த இடஒதுக்கீடு போராட்டம்... 6 மாணவர்கள் பலியான சோகம்!

Students Protest In Bangladesh : மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் ஷேக் ஹசினா, எதிர்க்கட்சியினர் தங்களின் சுயநலத்துக்காக மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Jul 17, 2024 - 13:34
Jul 18, 2024 - 10:21
 0
வன்முறையில் முடிந்த இடஒதுக்கீடு போராட்டம்... 6 மாணவர்கள் பலியான சோகம்!
Students Protest In Bangladesh

Students Protest In Bangladesh : வங்கதேச நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வன்முறை களமாக மாறியுள்ளது. இதில் 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த போராட்டம் வெடிக்க காரணமாக இருந்தது எது? 

1971ம் ஆண்டு வங்கதேச நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீட்டு வழங்கப்பட்டு வருகிறது. 'இந்த இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் திறமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்று மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். நேற்று முன்தினம் இரவு தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர்நகர் பல்கலைக்கழகத்தில் திரண்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். 

அப்போது போராட்டம் நடத்திய மாணவர்கள் சங்கங்களுக்கும், ஆளும் அரசு ஆதரவு கொண்ட மாணவர்  சங்கங்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 100 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

மாணவர்களின் இந்த மோதல் டாக்கா, சட்டோகிராம் மற்றும் ரங்பூர் என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. இடஒதுக்கீடுக்கு ஆதரவான மாணவர்களும் மற்றும் காவல் துறையும், இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களுக்கும் இடையே மோதல் பயங்கரமாக வெடித்தது.

மாணவர்கள் கடும் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பிரதமர் ஷேக் ஹசினா பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களின் வாரிசுகளுக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும் என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியினர் தங்களின் சுயநலத்துக்காக மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக பிரதமர் ஷேக் ஹசினா குற்றம்சாட்டியுள்ளார்.

''மாணவர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம். போராட்டத்தை கைவிட வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் ஷேக் ஹசினா, இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோனை நடத்தியுள்ளார். மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் பள்ளி, கல்லுரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்தது வங்கதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow