சென்னை: சென்னையின் 3வது முனையமாக இருக்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத்துக்கும், செங்கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கும் ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. இது தவிர எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்(Chennai Electric Trains) சேவையில் பல்வேறு மாற்றங்களை செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.40 மணி முதல் மதியம் 12.50 வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.50 வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை தினமும் இரவு 7.19 முதல் இரவு 11.59 மணி வரை சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன.
மறுமார்க்கமாக மேற்கண்ட நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 8.55 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் செங்கல்பட்டு-தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் ரத்து செய்யப்படும் நாட்களில் காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50 மணிக்கும் மற்றும் இரவு 10.40, 11.05, 11.10, 11.59 மணிக்கு சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக வழக்கமான ரயில் ரத்து செய்யப்படும் நாட்களில், பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.20, 10.40, 11.00, 11.20, 11.40, 12.00, 12.20, 12.40, 1.00, 1.20, 1.40 மணிக்கும் மற்றும் இரவு 11.20, 11.55, 12.20, 12,.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.