‘லேடீஸ் ஹாஸ்டல் மாதிரி இருக்கு’ பேத்தி வேண்டாம்... பேரனுக்கு Yes! சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி...
பெண் குழந்தை வேண்டாம், ஆண் வாரிசு தான் வேண்டும் என, கருத்தம்மா காலத்து கள்ளிப்பால் பாட்டியாக மாறியுள்ளார் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

சில நேரங்களில் சில மனிதர்கள் என்பது போல, சில நேரங்களில் ஜாலியாக எதையாவது பேசும்போது, அது பேசியவருக்கே பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
அப்படி குண்டக்க மண்டக்க பேசி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு வருகிறார் சிரஞ்சீவி காரு. தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக வலம் வரும் சிரஞ்சீவிக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிரஞ்சீவி மட்டும் அல்லாமல், இவரது குடும்பமே டோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தம்பி பவன் கல்யாண், மகன் ராம் சரண், மருமகன் ராணா என சிரஞ்சீவி குடும்பத்தில் ஹீரோக்களுக்கு பஞ்சமே இல்லை.
சிரஞ்சீவி அவரது மகன் ராம் சரண் என இருவருமே, அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க, வருமானம் கோடிகளில் கொட்டுகிறது. அரண்மனை போல வீடு, வரிசையாக சொகுசு கார்கள், நீச்சல்குளம் என ராஜ வாழ்க்கை தான். இப்படி ஏகபோகமாக வாழ்ந்து வரும் சிரஞ்சீவி, இனிமேல் பேத்தி வேண்டாம், பேரன் தான் வேண்டும் என பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சிரஞ்சீவிக்கு ராம் சரணுடன், ஸ்ரீஜா, சுஷ்மிதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் மகள்கள் தான் உள்ளனர். அதன்படி, சிரஞ்சீவிக்கு மொத்தமாக 5 பேத்திகள் இருக்க, ராம் சரணிடம் தனக்கு பேரன் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தெலுங்கில் பிரம்மானந்தா நடித்துள்ள புதிய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி, “வீடு முழுக்க பேத்திகளாக உள்ளனர், அவர்களுடன் இருக்கும் போது லேடீஸ் ஹாஸ்டல் வார்டனை போல உணர்கிறேன். ஆனால், தனது மரபை எடுத்துச் செல்ல ஆண் வாரிசு வேண்டும் என விரும்புகிறேன். ராம் சரணுக்கு பெண் குழந்தைகளை தான் பிடிக்கும். ஆனாலும், அவரிடம் ஆண் வாரிசை பெத்துக்கொடு என கேட்டதாக” பேசினார். ஆனால், ராம் சரணுக்கு அடுத்தும் பெண் குழந்தை தான் பிறக்குமோ என பயமாக இருப்பதாகவும் சிரஞ்சீவி சிரித்துக்கொண்டே கூறியிருந்தார்.
இதனை சிரஞ்சீவி ஜாலியாக பேசியிருந்தாலும், பெண் குழந்தைகள் மீதான அவரது புரிதலும் பார்வையும் பிற்போக்குத்தனமாக உள்ளதாக நெட்டிசன்கள் ரவுண்டு கட்டி அடித்து வருகின்றனர். கள்ளிப்பால் காலம் ஒழிந்துவிட்டது என நினைத்தால், சிரஞ்சீவியின் பேச்சை கேட்கும் போது, அதிர்ச்சியாக இருப்பதாகவும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேநேரம், சிரஞ்சீவி வீட்டில் ஏற்கனவே பெண் குழந்தைகள் அதிகம் இருப்பதால், தவறான எண்ணத்தில் அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை. ஜாலியாக பேசியதை இப்படி சர்ச்சையாக்க வேண்டாம் என பலரும் அவருக்கு வக்காளத்து வாங்கி வருகின்றனர்.
What's Your Reaction?






