அரசியல்

PROJECT TVK வெற்றி? ஏழுமலையானுக்கு P.K. நன்றி!

தவெக தலைவர் விஜய்யை சந்தித்த கையோடு திருப்பதிக்கு சென்று ஏழுமலையானுக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுள்ளார் பிரசாந்த் கிஷோர். பி.கேயின் திடீர் சாமி தரிசனம், தவெகவுடன் டீலிங் ஓகே ஆனதாலா? அல்லது யாருக்காவது நாமம் போடுவதற்காகவா? என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

PROJECT TVK வெற்றி? ஏழுமலையானுக்கு P.K. நன்றி!
PROJECT TVK வெற்றி? ஏழுமலையானுக்கு P.K. நன்றி!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. முக்கிய கட்டமாக தேர்தல் வியூக பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பை நடத்தி முடித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பில், தற்போதைய அரசியல் நிலவரம், 2026 சட்டமன்ற தேர்தல் திசை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து  விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு உள்ள செல்வாக்கு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதாவது, தவெகவை பொறுத்தவரை 8 முதல் 10 சதவீத வாக்குகள் பெறக்கூடும் எனவும், விஜய் தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு முன்பு ஒரு சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் சமயத்தில் மற்றொரு சுற்றுப்பயணம் என மக்களை சந்தித்தால், கூடுதலாக ஐந்து சதவீதம் வரை வாக்குகளை பெறலாம் எனவும், வாக்கு சதவீதம் கூடுவதற்கு இளைஞர்களின் ஓட்டு பெரிதும் உதவும் எனவும்  பிரசாந்த் கிஷோர் பல்வேறு விஷயங்களை விஜய்யிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 30% சதவீதம் அல்லது அதற்கு மேல் வாக்கு சதவீதம் பெறக்கூடிய கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்பதால் பிரசாந்த் கிஷோர் தரப்பில் சொல்லப்பட்ட தமிழக வெற்றி கழகத்திற்கான வாக்கு சதவீத கணக்கால், விஜய்க்கு குழப்பம் ஏற்பட்டது தான் மிச்சம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15 சதவீத வாக்குகள் என வைத்துக் கொண்டாலும், அதே அளவிலான வாக்கு சதவீதம் இருக்கக்கூடிய கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே கணிசமான இடங்களை பெற முடியும்.  குறைந்தபட்சம் கூட்டணி ஆட்சியாவது அமைக்க முடியும். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்திற்கு கூட்டணிக்கான ஒரே தேர்வாக  அதிமுக மட்டுமே  இருக்கும் நிலையில், அதிமுக – தவெக கூட்டணி உருவாக்கம் குறித்து பிரசாந்த் கிஷோர் Proposal-ஐ கொடுத்ததாக பனையூர் பல்ஸ் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஏற்கனவே  கூட்டணிக்கான தலைமையாக விஜய்யை  ஏற்றுக் கொள்ளும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளதால், அதிமுக போன்ற பெரிய கட்சி விஜய்யின் நிபந்தனையை ஏற்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தவிர்த்து, நாம் தமிழர் கட்சி மட்டுமே எட்டு சதவீத வாக்குகளுடன் வலிமையாக உள்ளது. ஆனால் விஜய் மீதான சீமானின் விமர்சனத்தால் அந்த கூட்டணிக்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், 2026ல் ஆட்சி என்ற லட்சியத்துடன் களமிறங்கிய உள்ள நிலையில் அதிகபட்சம் 15 சதவீத வாக்குகள் தான் என பிரசாந்த் கிஷோர் சொல்லி இருப்பது விஜய்க்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் ஆட்சியை பிடிக்கக்கூடிய அளவிற்கு வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்பது மட்டுமே தமிழக வெற்றி கழகத்தின் லட்சியமாக மாறியுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இப்படி, தவெகவை கன்ப்யூஸ் ஆக்கிவிட்டு சென்ற பிரசாந்த் கிஷோர், வந்த வேலை சிறப்பாக முடிந்தது, சரி ஏழுமலையானுக்கு ஒரு நாமத்தை போட்டுவிட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

எனவே, திருப்பதியில் பி.கே. போட்ட நாமம் ஏழுமலையனுக்காகவா? அல்லது தமிழக அரசியல் கட்சிகளுக்காகவா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.