“டேய் வெட்டி போட்டுருவேன்..” எகிறிய காங். பிரமுகர் மகன் போக்குவரத்து ஊழியர்கள் படுகாயம்!

காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன், அரசுப் பேருந்தில் செய்த ரகளையால், போக்குவரத்து ஊழியர்கள் 4பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்யாமல் அரசுப் பேருந்தில் ஏறி சீட் கேட்டது தான் இந்த ரணகளத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

Feb 12, 2025 - 21:34
Feb 13, 2025 - 15:06
 0
“டேய் வெட்டி போட்டுருவேன்..”  எகிறிய காங். பிரமுகர் மகன்  போக்குவரத்து ஊழியர்கள் படுகாயம்!
“டேய் வெட்டி போட்டுருவேன்..” எகிறிய காங். பிரமுகர் மகன் போக்குவரத்து ஊழியர்கள் படுகாயம்!

சிதம்பரம் அருகேயுள்ள புவனகிரியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் ராகவன், 21 வயதான இவர் கல்லூரியில் படித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனது நண்பர்களுடன் சிதம்பரம் பேருந்து நிலையம் சென்ற ராகவன், அங்கு நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஏறி சீட் கேட்டதாக தெரிகிறது. ஆனால், இந்த பஸ்ஸில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் எனக் கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த ராகவன், “பேருந்தை விட்டு இறங்க முடியாது... உன்னால என்ன செய்ய முடியுமோ அத பண்ணிக்கோ” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, அங்கிருந்த நேர கட்டுப்பாட்டு அதிகாரிகள், இருதரப்பையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமான ராகவன், பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் உட்பட மேலும் இரண்டு அதிகாரிகளையும் கடுமையாக தாக்கியதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்த போலீஸார், ராகவனை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், ராகவன், தனது தந்தை காங்கிரஸ் கவுன்சிலர் என சொன்னதால், போலீஸார் அவரை விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. 
 
இதனிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் அரசுப் பேருந்து நடத்துனர், நேர கட்டுப்பாட்டு அதிகாரிகளை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அரசுப் பேருந்து நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டிய ராகவன், “எங்க அப்பா மேல கைய வச்சா... இங்கேயே வெட்டி போட்டுடுவேன்” என பகிரங்கமாக மிரட்டியது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இச்சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த போலீஸார் இதனை கண்டுகொள்ளாமல் விலகிச் சென்றதாக சொல்லப்படுகிறது.

படுகாயமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ராகவனை போலீஸார் கைது செய்துள்ளனர். அதேநேரம், போலீசாரின் அலட்சியத்தால் தான் இந்த தாக்குதல் நடந்ததாகவும், கவுன்சிலர் மகன் என்பதால் அவரை போலீசார் விசாரணை செய்யாமலேயே அனுப்பிவிட்டதாகவும், அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow