இந்தியாவுக்கு 6வது தங்கம்.. உயரம் தாண்டுதலில் புதிய சாதனை.. யார் இந்த பிரவீன் குமார்?
பிரவீன் குமாரின் திறமையை கண்டு வியந்த பாரா தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யபால் சிங், அவரை முழுமையாக உயரம் தாண்டுதல் போட்டி பக்கம் திருப்பி அதிதீவிர பயிற்சி அளித்தார். இதன் காரணமாக 2019ம் ஆண்டு நாட்விலில் நடைபெற்ற உலக பாரா தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 84 வீரர்கள், 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில், தொடக்கம் முதலே நமது வீரர்கள் பதக்கங்களை அள்ளிக்குவித்து வருகின்றனர்.
பாராலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியவர் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா. இவர் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அடுத்ததாக 2வது தங்கத்தை இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தட்டித் தூக்கினார். 3வது தங்கத்தை
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சுமித் அன்டிலும், 4வது தங்கப் பதக்கத்தை வில்வித்தை போட்டியில் ஹர்விந்தர் சிங்கும் தட்டித் தூக்கினார்கள்.
அடுத்ததாக 5வது தங்கப் பதக்கத்தை ஆண்களுக்கான 'கிளப் த்ரோ' போட்டியில் தரம்பிர் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில், 6வது தங்கத்தை இந்திய வீரர் பிரவீன் குமார் நாட்டுக்காக வென்று அசத்தியுள்ளார். அதாவது உயரம் தாண்டுதல் போட்டியில் 2.08 மீட்டர் தாண்டி புதிய வரலாற்று சாதனை படைத்த அவர் தங்கப்பதக்கத்தையும் தட்டித் தூக்கியுள்ளார். 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர் இப்போது தங்கத்தை கைப்பற்றி அசத்த்தியுள்ளார்.
பிரவீன் குமாரின் சொந்த ஊர் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கோவிந்த்கர் ஆகும். ஊனமுற்ற காலுடன் பிறந்த பிரவீன் குமார் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என சிறுவயது முதலே ஆர்வம் கொண்டிருந்தார். இவர் முதலில் வாலிபால் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளில் தொடர்ந்து பங்கேற்றார். ஒரு முறை முதன் முறையாக உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற பிரவீன் குமார் அதில் தனது திறமையை நிரூபித்தார்.
அதுவே அவரது வாழ்க்கையில் திருப்பு முனையானது. பிரவீன் குமாரின் திறமையை கண்டு வியந்த பாரா தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யபால் சிங், அவரை முழுமையாக உயரம் தாண்டுதல் போட்டி பக்கம் திருப்பி அதிதீவிர பயிற்சி அளித்தார். இதன் காரணமாக 2019ம் ஆண்டு நாட்விலில் நடைபெற்ற உலக பாரா தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தொடர்ந்து ஆசிய பாரா விளையாட்டு 2022 தொடரில் 2.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனை படைத்து தங்கப்பதக்கமும் வென்றார்.
பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களை கைப்பற்றி 14வது இடம் பிடித்துள்ளது. சீனா 74 தங்கம், 57 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 170 பதக்கங்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 38 தங்கம், 31 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா 27 தங்கம், 34 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 79 பதக்கங்களை கைப்பற்றி 3ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?