Dindigul Dragons Vs Chepauk Super Gillies Match Highlights : தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீஸனில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி இந்த சீஸனின் 2வது குவாலிஃபையர் போட்டிக்குத் தகுதிப் பெற்றது. 4 முறை டி.என்.பி.எல் சாம்பியனான சேப்பாக் அணி இந்த தோல்வியின் மூலம் தொடரிலிருந்து வெளியேறியது.
முன்னதாக, டாஸ் வென்று திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பாபா அபராஜித் 54 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். அதோடு தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் 2000 ரன்களைக் கடந்த 3வது வீரர் என்ற மைல்கல்லையும் எட்டினார். திண்டுக்கல் அணியின் பௌலிங்கைப் பொறுத்தவரை சந்தீப் வாரியர் அதிகபட்சமாக 2 விக்கெட்கள் எடுத்தார்.
2024 தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2வது குவாலிஃபையர் போட்டிக்குத் தகுதி பெற திண்டுக்கல் அணி 159 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. ராஹில் ஷா வீசிய 2வது ஓவரில் விமல் குமார் 3 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான தொடக்கத்தைக் கொடுக்க, திண்டுக்கல் கேப்டன் அஷ்வின் 3வது வீரராக களமிறங்கினார். ஓப்பனர் ஷிவம் சிங்குடன் இணைந்து அஷ்வின் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி டி.என்.பி.எல் தொடரில் 2வது அரைசதத்தைப் பதிவு செய்தார். இவ்விரு வீரர்களும் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 112 ரன்கள் சேர்த்து திண்டுக்கல் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
மறுபுறம் தொடர்ச்சியாக 3வது 50+ ரன்களைக் கடந்து ஷிவம் சிங் மீண்டும் இந்த சீஸனின் டி.வி.எஸ் ரெய்டர் ஆரஞ்சு கேப்பை தன் வசப்படுத்தினார். திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு கடைசி 7 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் பிரேம் குமார் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் கொடுக்க அந்தப் பந்தை கீப்பர் பின்புறம் தட்டிவிட நினைத்த அஷ்வினின் கேட்ச்சை ஜெகதீசன் அட்டகாசமாக எடுத்து அஷ்வின் (57 ரன்கள் 35 பந்துகள்) ஆட்டமிழக்க காரணமானார்.
அடுத்தப் பந்திலேயே பாபா இந்திரஜித் (0) ரன் எதுவும் எடுக்காமல் டாரில் ஃபெராரியோவின் அபாரமான ஃபீல்டிங்கால் ரன் அவுட்டாக, அவருக்கு அடுத்து களமிறங்கிய பூபதி வைஷ்ண குமாரும் (1) பிரேம்குமாரின் சிறப்பான பந்துவீச்சால் ஆட்டமிழந்து வெளியேற சேப்பாக் அணிக்கு ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப முடியுமென்கிற நம்பிக்கைப் பிறந்தது.
சிறப்பாக விளையாடி வந்த ஷிவம் சிங் 49 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அபிஷேக் தன்வரின் வியூகத்தில் தனது விக்கெட்டை இழக்க, ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. இறுதியில் ஒரு பந்து மீதமிருக்க திண்டுக்கல் டிராகன்ஸ் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி 2ஆவது தகுதிசுற்றுக்கு [Qualifier 2] முன்னேறியது.
இந்த தோல்வியின் மூலம் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இந்த சீஸனிலிருந்து வெளியேறியது. இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி திருப்பூர் தமிழன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.