Kalikambal Priest Karthik Munusamy Case : கோவையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான 30 வயது பெண் ஒருவர் சென்னை சாலிகிராமம் பகுதியில் தங்கி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு அந்த பெண் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, கோவில் குருக்களான கார்த்திக் முனுசாமி அந்த பெண்ணுக்கு அறிமுகமாகி உள்ளார். கோவிலுக்கு செல்லும்போது கார்த்திக் முனுசாமி அவரை சந்தித்து பேசி வந்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கார்த்திக் முனுசாமி(Karthik Munusamy) பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்த நிலையில், கார்த்திக் முனுசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதும், மனைவியை பிரிந்து வந்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதும் பின்னரே தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடந்த 9ஆம் தேதி அந்த பெண் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் முனுசாமி மீது ஏமாற்றுதல், பாலியல் கொடுமை செய்தல், கருச்சிதைவு உண்டாக்கும் குற்றத்தில் ஈடுபடுதல், ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி (Karthik Munusamy Arrest) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருந்தார். ஆனால் கடந்த ஐந்து நாட்களாக அவர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி தலைமறைவாகி விட்டதாகவும் அவர் தரப்பிலிருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் தற்போது நந்தினி புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று மதுரவாயலில் உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நந்தினி, "கார்த்திக் முனிசாமி ஜாமினில் வெளிவந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் இருக்கிறார். நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனும் நிபந்தனை உள்ளது.
ஆனால் அந்த நிபந்தனையை அவர் மீறி இருக்கிறார். நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 25ஆம் தேதி வரைதான், அவர் மதுரை காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுள்ளார். அதன் பின்னர் மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு நடைபெறும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திடுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த தகவல் இதுவரை விருகம்பாக்கம் காவல் நிலையத்தை வந்து அடையவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரும் நேரில் வந்து கையொப்பம் விடாமல் தலைமறைவாகியுள்ளார். ஏற்கனவே அவர் சிறைக்கு செல்லும் முன்பு என்னை வெட்டி கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார்.
தற்போது தலைமறைவாக வெளியே உள்ளதால் எனக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. எனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் தற்போது காவல் நிலையம் வந்துள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதால்தான், நான் ஊடகங்களையும் தேடி வந்துள்ளேன். கார்த்திக் முனுசாமி (Karthik Munusamy) தனது பண பலத்தையும் அதிகார பலத்தையும் வைத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக நான் மேல்முறையீடு செய்வேன். காவல்துறை அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். அதிகாரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதாலும் பண பலம் படைத்தவராக இருப்பதாலும் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஈடுபடுகிறார். அதுமட்டுமின்றி பல விஐபிகள் தொடர்பு அவருக்கு இருக்கிறது. இதனால் அவர் மீது மீண்டும் புகார் அளிக்க உள்ளேன்" என்று தெரிவித்தார்.