Annamalai : கர்நாடகாவில் பிஸ்னஸ்.. துரைமுருகன் மீது சந்தேகம் உள்ளது.. அண்ணாமலை சராமாரி தாக்கு
Annamalai on Duraimurugan : காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட துரைமுருகன் பேசவில்லை என்பதால் பணம் வாங்கினாரா என்ற சந்தேகம் உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Annamalai on Duraimurugan : ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை(Annamala), “தீரன் சின்னமலை(Dheeran Chinnamalai) அவர்களுடைய புகழ் எல்லோருக்கும் தெரியும். 1801, 1802, 1803, 1804 ஆகிய ஆண்டுகளில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் தீரன் சின்னமலை. இதுபோன்று குறுநில மன்னர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்று, விரட்டி அடித்த தலைவர்கள் குறைந்த அளவில் உள்ளனர்.
அதில், தீரன் சின்னமலை 3 முறை வெற்றிபெற்றவர். ஆனால், சூழ்ச்சி காரணமாக 1805ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில், ஆடிப்பெருக்கு நன்னாளில் தூக்கிலிடப்பட்டார். சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமையை நாம் பேசிக்கொண்டு இருக்க வேண்டும்.
அவினாசி - அத்திக்கடவு அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்டதாக கூறப்படும் திட்டம் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அந்த திட்டப் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்ய உள்ளோம். முன் விரோதம் காரணம் கொலைகள் நடப்பதாக, சில திமுக அமைச்சர்கள் கூறுகிறார்கள். பொதுவாகவே கேட்கிறேம், கொலை எப்படி நடக்கும்? 99% கொலைகளுக்கு முன் விரோதம் காரணமாக இருக்கும். ஒரு சதவீத கொலைகளுக்கு மட்டும்தான் காரணங்கள் இல்லாமல் இருக்கலாம்.
இதற்கு முன்னமும் கொலைகள் நடைபெற்றுள்ளது. இப்போதும் நடைபெற்று வருகிறது. ஏன் இப்போது அதிகம் நடக்கிறது? காரணம் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளது. யாரை வேண்டுமானால், எப்போது கொலைகள் செய்யலாம் என்ற நிலைமை இருக்கிறது.
ஆனால், காவல்துறையினருக்கு தெரியும். தாங்கள் பணி புரியும் இடங்களில் சாதிய மோதல்கள் இருக்கிறதா? பலி பலிக்கு கொலை நடக்குமா? முன் விரோதம் எந்த அளவுக்கு இருக்கிறது என்றெல்லாம் அடிப்படையாகவே தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது எதிர்தரப்பினை கண்காணிப்பதுதான் அவர்களின் முதல் வேலை. அடிப்படையான விஷயங்களை காவல்துறையினர் செய்வதில்லை. காவல் நிலையத்தில் செய்ய வேண்டிய வேலைகளை செய்யவதில்லை.
காரணம், திமுக அரசு அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவில்லை. சராசரியாக ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 13 முதல் 17 கொலைகள் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால், திமுக அமைச்சர்கள் அளிக்கும் விளக்கங்களை கேட்கும்பொழுது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை” என்றார்.
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு மீது சந்தேகம் எழுகிறது என்று துரைமுருகன் கூறியது குறித்த கேள்விக்கு, “ஒரு மூத்த அமைச்சர், பலமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த துரைமுருகன் கூறுவது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் கை நீட்டி பணம் வாங்கனாரா என்று துரைமுருகன் மீது சந்தேகம் உள்ளது.
ஏனென்றால், கர்நாடகா காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகள் குறித்து ஒரு வார்த்தை கூட துரைமுருகன் (Duraimurugan) பேசவில்லை, கண்டிக்கவில்லை. டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரின் கருத்துக்கு துரைமுருகன் ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. எதிர்த்து ஒரு அறிக்கை விடவில்லை.
பெங்களூரில் துரைமுருகனின் மகனுக்கோ அல்லது முதலமைச்சர் குடும்பத்திற்கோ ஏதேனும் தொழில் கூட்டணி இருக்கிறதா? பட்டும் படாமல், பாலிஸாக அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்களா? மத்திய அரசின் மீது சந்தேகம் இருக்கிறது என்றால் அதை அவர் வெளிப்படையாக சொல்ல வேண்டும். எனவே, துரைமுருகன் மீதும், திமுக மீதும் பணம் வாங்கினார்களா என்று எனக்கு சந்தேகம் உள்ளது.
ஏனென்றால், கலைஞர் குடும்பத்தினர் பெங்களூருவில் தனியார் ஷோரூம் நடத்தி வருகின்றனர். அது போகபோக உங்களுக்குத் தெரியவரும். அந்த குடும்பத்திற்கு நிறைய வணிக மையங்கள் இருக்கிறது. அதனால், கர்நாடக அரசை எதிர்த்து பேசிவிட்டால், அங்குள்ள கடைகளில் கல் எறிந்துவிடுவார்கள் என்ற பயத்தில் உள்ளனர்” என்றார்.
What's Your Reaction?