எம்ஜிஆர் காலத்து நக்கீரர் தோரண வாயில்..மதுரையில் போக்குவரத்து நெரிசல்.. நீதிபதிகள் அதிரடி உத்தரவு

மதுரை மாட்டுத்தாவணி அருகே கட்டப்பட்டுள்ள பழமை வாய்ந்த நக்கீரர் தோரண வாயில் எனும் பெயரில் பழமையான அலங்கார வளைவு நுழைவாயிலை அப்புறப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Sep 3, 2024 - 15:17
Sep 4, 2024 - 10:09
 0
எம்ஜிஆர் காலத்து நக்கீரர் தோரண வாயில்..மதுரையில் போக்குவரத்து நெரிசல்..  நீதிபதிகள் அதிரடி உத்தரவு
high court bench order demolition of madurai nakkeerar thorana vayil

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவாயில் மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள நுழைவாயில் ஆகிய இரண்டையும் அகற்றி அப்புறப்படுத்துங்கள் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இரண்டு நுழைவாயில்களையும் இடித்து அப்புறப்படுத்துவது குறித்து மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தூங்கா நகரமான மதுரையில், ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் 1981 ஆம் ஆண்டு ஜனவரி 4 தொடங்கி 10 ஆம் நாள் வரை நடைபெற்றது. உலகத்தமிழ் மாநாட்டின் நினைவாக மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் அறிஞர்களின் சிலைகள் நிறுவப்பட்டன. தமுக்கம் வாயிலில் அமைக்கப்பட்ட கருங்கல்லாலான தேரில் தமிழன்னை சிலை நிறுவப்பட்டு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் திறக்கப்பட்டது.

மதுரை மாநகரின் திசைக்கொன்றாக நான்கு தோரண வாயில்கள் அமைக்கப்பட்டன.மதுரை தமுக்கத்தில் அமைக்கப்பட்ட வளைவுக்கு மூவேந்தர் நுழைவாயில் எனப் பெயரிட்டு, அதனை எம்ஜிஆரே திறந்து வைத்தார். விராட்டிபத்தில் அங்கயற்கண்ணி தோரண வாயிலும்,  மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் தோரண வாயிலும், ஐராவதநல்லூரில் சோழன் தோரண வாயிலும், பசுமலையில் சேரன் தோரண வாயிலும் எழுப்பப்பட்டன. 

இதனிடையே மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் தோரண வாயில் எனும் பெயரில் பழமையான அலங்கார வளைவு கட்டப்பட்டுள்ளது.  அலங்கார வளைவு வழியாக மட்டுமின்றி அதன் ஓரங்களிலும் இடம் இருப்பதால், அதன் வழியாகவும் வாகனங்கள் முந்திச் செல்ல முயல்கின்றன. இதனால், ஏராளமான விபத்துக்கள் நிகழ்வதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் காரணமாகிறது. 

ஆகவே பழைய நக்கீரர் தோரண வாயிலை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். ஆகவே மதுரை மாட்டுத்தாவணி  பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் தோரண வாயில் எனும் அலங்கார வளைவை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கு  நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மாட்டுத்தாவணி பேருந்து நிலைய பாதை  மற்றும் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள பெரியார்  அலங்கார வளைவு  வழியாக கடந்து செல்லும் போது அலங்கார வளைவு சாலையின் நடுவில் இருப்பதையும், அதன் ஓரங்களில் வாகனங்கள் முந்திச் செல்வதையும் நான்  பார்த்திருக்கிறேன்
பொதுவாக சாலைகளை அகலப்படுத்தும் போது இதுபோல போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் அலங்கார வளைவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என  நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் அலங்கார வளைவு மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்  அருகே உள்ள நக்கீரர் தோரண வாயில் அலங்கார வளைவு ஆகியவற்றை உடனடியாக அகற்ற எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர், மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் மற்றும் தலைமை பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 40ஆண்டுகள் பழமையான நக்கீரர் தோரண வாயில் இடிக்கப்படும் பட்சத்தில் அதிமுகவினர் என்ன மாதிரியான எதிர்வினையாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow