ஆசிரியர் தினம்.. என்னை செதுக்கிய சிற்பிகளுக்கு.. வழிகாட்டிகளுக்கு பணிவு கலந்த நன்றிகள்!

நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பான ஆசிரியர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Sep 5, 2024 - 06:55
Sep 5, 2024 - 17:28
 0
ஆசிரியர் தினம்.. என்னை செதுக்கிய சிற்பிகளுக்கு.. வழிகாட்டிகளுக்கு பணிவு கலந்த நன்றிகள்!
teachers day 2024

மதுரை: ஆசிரியர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நம்முடைய வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவர்கள் ஆசிரியர்களே. அன்பானவர்களாக, கண்டிப்பானவர்களாக நம்மை வழி நடத்தும் ஆசான்களாக பயணித்த ஆசிரியர்களுக்கு இன்று நாம் நன்றி கூற வேண்டும். என்னுடைய ஆரம்ப கல்வியில் அ ஆ கற்றுத்தந்த கனகா டீச்சர் முதல் ஆங்கில இலக்கிய பாடத்தின் மீது காதலை ஏற்படுத்திய ஹெச்ஓடி கஸ்தூரி மேடம் வரை என்னை ஒவ்வொரு வகுப்பிலும் படிப்படியாக செதுக்கி வடிவமைத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள் அனைவரையும் இன்று நான் நினைவு கூறுகிறேன். 

ஒன்றாம் வகுப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அடியெடுத்து வைப்பதற்கு முதல்நாள்... சிலேட்டும் குச்சியும் வாங்க பாட்டியுடன் கடைக்கு போன போதே அறிமுகமானவர் ஐயம்மா டீச்சர். எனக்கு முதல் முதலாக சிலேட்டு வாங்கி பரிசளித்து தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தவர். குண்ணத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு முதல் முதலாக சென்று தலைமை ஆசிரியரின் முன் என் கையை தலைக்கு மேலே கொண்டு போய் காதை தொட்டு அட்மிஷன் போட்ட பின்னர் ஒரு வகுப்பில் கொண்டு போய் அமர வைத்தார்கள். 
கண்கள் குளமாக கண்ணீருடன் நான் வகுப்பிற்கு சென்ற போது அங்குதான் முதன்முதலாக அந்த தேவதை போன்ற ஆசிரியை என் முன் வந்தார். ஒல்லியாய் கொஞ்சம் உயரமாக இருந்த டீச்சர் என் கையை பிடித்து நானும் புதுசுதான் இப்போதான் வந்தேன் என் பேரு கனகா...உன் பேரு என்ன பாப்பா என்று ஸ்நேகிதியை போல பேசியது பிடித்துப்போனது.

கனகா டீச்சரிடம் தொடங்கிய பாசம் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்து கிடைத்தது. பள்ளிக்கே நான் செல்லப்பிள்ளையாக மாறிப்போனேன். 2ஆம் வகுப்பில் துரைசாமி ஆசிரியர், மூன்றாம் வகுப்பில் ஐயம்மா டீச்சர், தமிழ் ஐயா கருப்பையா வாத்தியார் கற்றுக்கொடுத்த தமிழ் இன்றைக்கும் மறக்கமுடியாத நினைவில் இருக்கிறது. நாரணம்மாள் டீச்சர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆசிரியர், விஜயா டீச்சர், ராமசாமி ஐயா என ஆரம்ப பள்ளியிலேயே ஒவ்வொரு ஆசிரியர்களும் புத்தகங்களில் உள்ள பாடங்களுடன் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினையும் கற்றுக்கொடுத்தவர்கள். 

உயர்நிலைக்கல்வி படிக்க பக்கத்து ஊரான பாப்புநாயக்கன் பட்டிக்கு சென்ற போதுதான் கலங்கரை விளக்கமாக எனக்கு வழிகாட்டிய ஆசிரியர்களை சந்தித்தேன். ஒன்பதாம் வகுப்பு 'அ' பிரிவில் முருகேசன் சார் வகுப்பு ஆசிரியராக இருக்க, அதே வகுப்பில் கணக்கு ஆசிரியராக அடி வெளுத்து வாங்கும் முத்து சுபாஷ் எல்லோரையும் நடுங்க வைத்தார். கணக்கு ஆசிரியரின் அடிக்கு பயந்தே பல நாட்கள் பள்ளிக்கு போகாமல் தவிர்த்தது உண்டு. 

சில நாட்களிலேயே புதிதாக ஆசிரியர் அண்ணன் ஷேக் முகபூப் பாசத்தோடு கணக்கு பாடத்தை புரிய வைக்க வந்தார். அப்புறம் வகுப்பறைகளில் வசந்தம் வீசியது கணக்கு பாடத்தில் இருந்த கசப்பு மறந்து போனது. பத்தாம் வகுப்பில் அதே முத்து சுபாஷ், ஆனால் ஏனே அப்போது கணக்கு கசக்கவில்லை. காரணம் கணக்கு எளிமையாக புரியத்தொடங்கிவிட்டதுதான். 

பிரேமா டீச்சரின் பிரியத்தில் ஆங்கிலமும் புரிய ஆரம்பித்தது அறிவியல் வகுப்புதான் விடாது கறுப்பாக உறக்கத்தை கொடுத்தது. ஒருவழியாக பாஸ் ஆகி மேல்நிலை கல்வியில் அடி எடுத்து வைத்தேன். மேல்நிலை வகுப்பில் தமிழ் ஐயா சங்கரலிங்கம் ஒற்றுப்பிழைகளை தட்டிக்கொடுத்து திருத்த, வரவே வராது என்றிருந்த ஆங்கில இலக்கண பாடத்தை இனிப்பாக கற்றுக்கொடுத்தார் அண்ணன் செல்வராஜ். கணக்கு பாடத்திற்கு பயந்தே வேறு குரூப் மாற நினைத்த காலமெல்லாம் உண்டு. கணித ஆசிரியர் அண்ணனின் முயற்சியால் தட்டுத்தடுமாறி முட்டி மோதி ஒருவழியாக கற்றுக்கொண்டேன். பிசிக்ஸ் ஜானகி அக்கா, பயாலஜி தேன்மொழி அக்கா, கெமிஸ்ட்டி இளமாறன் சார் என வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடங்களை கற்றுக்கொடுத்ததோடு நட்போடும் பாசத்தோடு பேசி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்கள்.

காரைக்குடி அருகே பள்ளத்தூரில் பெண்கள் மட்டுமே படிக்கும் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் இன்றைக்கும் என்னுடைய ஆசிரியர்கள் தோழிகளைப் போல பழகியவர்கள் இருக்கிறார்கள். மல்லேஸ்வரி மேடம், கல்யாணி மேடம், கமலா மேடம், கஸ்தூரி மேடம் என ஒவ்வொரு வகுப்பிலும் எங்களுக்கு ஆங்கில இலக்கிய இலக்கணக்கங்களை கற்றுக்கொடுத்த நேரம் போக வாழ்க்கை பாடங்களையும் கற்றுக்கொடுத்தனர். 

எழுத்தின் மீதான ஆர்வமும் அவர்களிடம் இருந்துதான் ஒட்டிக்கொண்டது. ஒவ்வொரு முறை தடுமாறும் போது தாங்கிப் பிடித்தவர்கள் என் ஆசிரியர்கள். "விழுவதெல்லாம் எழுவதற்கே"...என்று கஸ்தூரி மேடம் சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

எம்ஏ இதழியல் மக்கள் தொடர்பியல், எம்ஏ ஜோதிடவியல் என என்னுடய பெயருக்கு பின்னால் எழுத்துக்கள் கூடிக்கொண்ட செல்வதற்கு பிரியமான ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களே காரணம். கஷ்டமான பாடங்களையும் இஷ்டமாக படிக்க வைத்தவர் ஜோதிட ஆசான் சுப்ரமணியன் ஐயா. 

எம்.ஏ, எம்.பில் என படித்து முடித்திருந்தாலும் பல ஆசிரியர்களை சந்தித்து இருந்தாலும் கனகா டீச்சர் கை பிடித்த தருணத்தையும், கஸ்தூரி மேடம் தோழமையோடு பேசிய தருணங்களையும் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. என் அன்பான ஆசிரியர்களே... நீங்கள்தான் என் ஹீரோ, ஹீரோயின்கள். என்னை செதுக்கி சிற்பமாக வடிவமைத்த உங்க அனைவருக்கும் என் பணிவு கலந்த நன்றிகள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow