தமிழர்களுக்கு எதிராக கருத்து.. மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசி இருந்தார். இதற்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

Sep 3, 2024 - 18:11
Sep 4, 2024 - 10:05
 0
தமிழர்களுக்கு எதிராக கருத்து.. மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே!
Shobha Karandlaje

சென்னை: தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டு  மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசி இருந்தார். இதற்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 

மேலும் திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்  மீண்டும் விசாரணைக்கு வந்தது.  

அப்போது ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஷோபா கரந்தலஜே 'எக்ஸ்' தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். 

முதலமைச்சரின் கருத்தை பெற்றே, செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்புக் கோரினால் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்ததாக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தெரிவித்தார். இந்த வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை நீதிபதி நாளை மறுதினம் ஒத்தி வைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow