Krishna Gokulastami 2024 : குசேலன் கண்ணன் நட்பு .. கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவல் படைத்தால் அள்ளிக் கொடுப்பான் கண்ணன்

Krishna Gokulastami 2024 : பகவான் கிருஷ்ணருக்கு எத்தனையோ பலகாரங்களை படைத்தாலும் அவனுக்கு பிடித்த வெண்ணெயும் அவலும் படைத்து வழிபட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அருளையும் பொருளையும் அள்ளிக்கொடுப்பான் கண்ணன்.

Aug 26, 2024 - 11:09
Aug 26, 2024 - 13:05
 0
Krishna Gokulastami 2024 : குசேலன் கண்ணன் நட்பு .. கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவல் படைத்தால் அள்ளிக் கொடுப்பான் கண்ணன்
krishna and kuchela a story of true friendship

Krishna Gokulastami 2024 : கிருஷ்ணன் நட்புக்கு மதிப்பு அளிப்பவன். நண்பர்களுக்காக எல்லாம் செய்வான். கேட்காமலேயே கொடுப்பான். கோகுலத்தில் சிறுவயதில் எத்தனையோ லீலைகளை செய்தாலும் துவாரகை மன்னாக அரசாட்சி செய்த போது நடத்திய லீலை அற்புதமானது. நண்பர் குசேலரின் ஏழ்மையை போக்க அவர் கேட்டது ஒரு பிடி அவல்தான். அவருக்கு பிடித்தமான அவலும் வெண்ணெயும் கொடுத்து வணங்கினால் போதும் கேட்காமலேயே எண்ணற்ற செல்வங்களை தருவார் கிருஷ்ணன்.  அந்த லீலையை படியுங்கள்.

கிருஷ்ணருடைய பால்ய நண்பர்களில் சுதாமர் எனப்படும் குசேலரும் ஒருவர். இருவரும் ஒன்றாக குருகுல வாசம் செய்தவர்கள். குருகுல வாசம் முடிந்தவுடன் அவரவர் தத்தம் இல்லம் திரும்பினர். 

சுதாமரும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளையும் பெற்றார். இவர்களுடைய ஏழ்மை நிலையை பார்த்தே சுதாமரை எல்லோரும் குசேலர் என அழைக்க ஆரம்பித்தனர். 

குசேலரின் மனைவி ஒருநாள் ஒரு நாள் கிருஷ்ணரைக் கண்டு கஷ்டம் நீங்க ஏதாவது உதவி பெற்று வருமாறு கேளுங்கள் என்று தனது கணவரிடம் கூறினாள்.  கிருஷ்ணருக்குக் கொடுக்க வேறொன்றும் இல்லாததால் ஒரு கந்தல் மூட்டையில்  சிறிது அவலை கட்டிக் கொடுத்தாள். 


குசேலரும் துவாரகையும் சென்று சேர்ந்தார். கந்தல் மூட்டையுடன் நின்ற அவரைக் கிருஷ்ணரும் வந்து வரவேற்றார், அவரை உள்ளே அழைத்துச் சென்று மஞ்சத்தில் உட்கார வைத்தார். 

ருக்மிணியை அழைத்து அறிமுகமும் செய்து வைத்தார். உணவு உபசாரங்கள் எல்லாம் முடிந்த பின் பழைய கதைகளைப் பேசினர். அப்போதும் தாம் வந்த காரணத்தை குசேலரால் சொல்லமுடியவில்லை, அந்த பரந்தாமனுக்காக அவல் கொண்டு வந்திருப்பதையும் தெரிவிக்க முடியவில்லை. 

தம்மை இவ்வளவு உயர்வாக உபசரித்த கிருஷ்ணருக்கு கேவலம் இந்த அவலையா கொடுப்பது என்று நினைத்தார் குசேலர். கிருஷ்ணனோ ஒன்றும் தெரியாதவர்போல, குசேலரைப் பார்த்து நீங்கள் வரும்போது அண்ணியார் எனக்கு ஒன்றும் கொடுத்தனுப்பவில்லையா? அவர் சௌக்கியம் தானே? என்றெல்லாம் கேட்டார். குசேலர் தமது துணியில் முடிந்து வைத்திருந்த மூட்டையைப் பார்த்து, இது என்ன என்று கேட்டவாறே அதை வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்தார். 

அவலைக் கண்டதும், சுதாமரே, எனக்குப் பிடித்தமான அவலைக் கொண்டு வந்துள்ளீரே என அதில் ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டார். அடுத்து ஒரு பிடி அவலை எடுக்கும் போது ருக்மிணி அதைப் பிடுங்கி தமது வாயில் போட்டுக் கொண்டார். 

கேவலம் இந்த அவலையா இவர்களுக்குக் கொடுத்தோம் என நினைத்துக் கொண்டே குசேலர் தமது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார். தாம் கேட்க வந்ததை விட பெரும் பாக்கியமான அந்த பரந்தாமனின் அருகாமையில் சிறிது நேரம் கழிக்க முடிந்ததே போதும் என தம்மைச் சமாதானப்படுத்திக் கொண்டார். 

வீடு திரும்பிய குசேலருக்கு அவரது வீடு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது. செல்வ செழிப்போடு இருந்தது.  தாம் கேட்காமலேயே வறுமை என்பதே அதன் பிறகு தமது வாழ்க்கையில் இல்லாது மறைந்து பகவானின் அனுக்கிரகத்தால் தமது மனைவியோடும் குழந்தைகளோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்.

நட்புக்கு மரியாததை கொடுக்கும் பகவான் கிருஷ்ணர் கேட்டவர்களுக்கு மட்டுமல்ல கேட்காதவர்களுக்கும் வரமளிப்பவன் என்பதை இந்த கதைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அன்போடு  கொடுப்பதை ஏற்றுக்கொண்டு நமக்கு அருளையும் பொருளையும் அள்ளிக்கொடுப்பான் கண்ணன். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow