Krishna Jayanthi 2024 : மயிலிறகு சூடிய கண்ணன்... துளசியும் நாவல் பழமும் கிருஷ்ணருக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா?

Krishna Jayanthi 2024 Celebration in Tamil : கண்ணபிரானுக்கு முக்கிய அடையாளம் அவரின் தனி கிரீடத்தில் இருக்கும் மயிலிறகு. பொதுவாக மயிலிறகு தெய்வீகம் நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்த மயிலிறகு நேர்மறையான சக்தியை ஈர்த்து கொள்ளும் பண்பு கொண்டது. கிருஷ்ணருக்கு விருப்பமான இந்த மயிலிறகை பூஜையில் வைத்து வழிபட்டால் பூரண அருள் கிடைக்கும்.

Aug 26, 2024 - 06:30
Aug 26, 2024 - 17:11
 0
Krishna Jayanthi 2024 : மயிலிறகு சூடிய கண்ணன்... துளசியும் நாவல் பழமும் கிருஷ்ணருக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா?
Krishna Jayanthi 2024 Celebration Why Peacock Feather Use Lord Krishna in Tamil

Krishna Jayanthi 2024 Celebration in Tamil : பகவான் கிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தி ஜென்மாஷ்டமி பண்டிகையாக நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. கருவில் இருக்கும் போதே பல சோதனைகளை சந்தித்தவன் கிருஷ்ணன். கிருஷ்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை. அவனது குறும்புத்தனம் பலரையும் கவரும். கிருஷ்ணன்  என்றாலே வசீகரமானவன் பக்தர்களை வசீகரிப்பவன். தலையில் மயிலிறகை சூடி நிற்பவன் கிருஷ்ணன். 

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாள் நள்ளிரவு நேரத்தில் கண்ணனின் அவதாரம் நிகழ்ந்த காரணத்தால்தான் நள்ளிரவு நேரத்தில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கிருஷ்ண ஜெயந்தி விழா பலவித முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் வழுக்குமரம் ஏறுதல், உறியடி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம், மலர் அலங்காரம், பூக்கோலம் போடுவார்கள். அதை நமது இல்லங்களிலும் செய்யலாம். கண்ணனுக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் படைக்க வேண்டும்.

கண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா. ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர். ராதையை மனதில் சுமக்கும் கண்ணன், அவளை தலையில் வைத்து கொண்டாடும் விதமாகவே மயிலிறகை தலையில் சூடியுள்ளார் என்று பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே கூறியுள்ளார். 

கிருஷ்ணருக்கு ஆயிரக்கணக்கான மனைவியர்கள் இருந்தாலும் பட்டத்து ராணி ருக்மணி. சத்யபாமா, ஜாம்பவதி காளிந்தி, மிராவிந்தா, சத்டயா, பத்ரா உள்ளிட்ட 8 பேர் இருந்தாலும் ருக்மணியும் பாமாவும் மட்டும்தான் பலரால் அறியப்பட்டவர். என்னதான் பாமா ருக்மணி கிருஷ்ணரின் பட்டத்து ராணிகளாக இருந்தாலும் கிருஷ்ணரின் மனம் கவர்ந்த ராதைதான் கண்ணனின் அருகில் இருக்கிறார். 

ராதா கிருஷ்ணன்தான் பலராலும் வணங்கப்படுகின்றனர். எனவேதான்  சக்தியின் அம்சமான ராதைக்கு மதிப்பு தரும் வகையில் மயிலிறகை தலை மேல் வைத்து கொண்டாடுகிறாராம் பகவான் கண்ணன். 

கிருஷ்ணரின் பட்டத்து ராணிகள் 8 பேரும் எட்டு பகுதிகளைக் கொண்ட ப்ரக்கிருதியை குறிக்கின்றனர். பஞ்சபூதங்களும், எட்டு திக்குகளும் கண்ணனில் அடக்கம். அது தவிர  கிருஷ்ணன் நரகாசூரனை கொன்று 16 ஆயிரம் இளவரசிகளை மீட்டு அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 16 ஆயிரம் இளவரசிகளும் நம் உடலில் உள்ள நாடி நரம்புகளை குறிக்குமாம். 

பகவான் கிருஷ்ணர் துளசி மாலை அணிந்திருப்பார். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கிருஷ்ணர் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவர் எனவேதான் கிருஷ்ணர் துளசிமாலை அணிந்து கொள்கிறார். துளசியின் சிறப்பு பற்றி லட்சுமியிடம் எடுத்துச்சொல்லியிருக்கிறார் பகவான் கிருஷ்ணர். 'லட்சுமி! இந்த துளசி, அமிர்தத்துக்கு நிகரானது. இதற்கு மரணம் என்பதே இல்லை. இதை நான் மிகவும் விரும்புகிறேன். எத்தனை மாலை அணிவித்தாலும், துளசிமாலை அணிவித்தால் தான் நான் மகிழ்வேன். இதை அணிந்தால் தான் எனக்கு அழகு என்று புகழ்வார்.

பகவத் கீதையில் எதை படைத்தால் தான்  திருப்தியாவேன் என்பதை கிருஷ்ணரே வெளிப்படுத்தியிருப்பார். அந்த பொருள்களை அன்றைய தினம் பூஜையில் வைப்பவர்களுக்கு கிருஷ்ணரின் அருள் பூரணமாக கிடைக்கும். அவை தூய துளசி இலை, 1 புஷ்பம், ஒரு உத்தரணி தீர்த்தம் ஆகியவை தான். மனம் நிறைந்த பக்தியோடு இவற்றை படைத்தால் கிருஷ்ணர் அதை ஏற்று கொள்வார் என்பது நம்பிக்கை. அதுவும் துளசியை அர்ப்பணம் செய்வதால்  உங்களுடைய பொருளாதார பிரச்சனைகள் நீங்கி செல்வம் செழிக்கும். 

நாவல்பழம் படைப்பது ஏன் என்றால் அதற்கும் ஒரு சம்பவம் உள்ளது. கோகுலத்தில் வயதான பாட்டி ஒருத்தி வீதியில் நாவல் பழம் விற்றுக் கொண்டிருந்தாள். ஒரு பிடி அரிசிக்கு ஒரு பிடி நாவல் பழம் என்று விற்றுக் கொண்டிருந்தவளை நோக்கி குழந்தை கண்ணன் வந்தான்.


வீட்டில் இருந்து பிடி அரிசி எடுத்து வந்தான் கண்ணன். ஆனால் வழிநெடுக அரிசி சிந்திக் கொண்டே வந்ததால் பாட்டி அருகில் வந்து சேர்ந்தபோது அவன் கையில் ஒன்றுமே இல்லை. பாட்டியை பாவமாக பார்த்தான் கண்ணன். ஆனாலும் அந்த பாட்டி கண்ணனுக்கு நாவல் பழம் கொடுத்தாள். 

வீடு திரும்பும்போது, கண்ணனால், வீதியில் சிந்தியிருந்த அரிசியை சேகரித்து கூடையில் போட்டுக் கொண்டாள். வீட்டிற்கு வந்ததும், கூடையை அவள் திறந்து பார்த்தபோது நகைகளும், பொற்காசுகளும் ஜொலித்தன. கண்ணனின் கருணையை நினைத்து மெய்யுருகி போனாள் பாட்டி. இதை நினைவுபடுத்தும் விதமாகவே கிருஷ்ண ஜெயந்தி அன்று நாவல் பழம் நைவேத்தியம் செய்கிறோம்.

கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். அப்போது கண்ணனின் லீலைகளை கதைகளாக சொல்ல வேண்டும். இதன்மூலம் மாணவ மாணவிகளுக்கு கல்வி அறிவும் புத்திசாலித்தனமும் கூடும் என்பது நம்பிக்கை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow