விஜய்யின் மனம் கவர்ந்த அஞ்சலை அம்மாள் யார்? | History Of Freedom Fighter Anjalai Ammal
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில், முக்கியமாக பார்க்கப்படுவது மாநாட்டு திடலில் வைக்கப்பட்டு இருக்கும் பிரமாண்ட கட்அவுட்கள் தான். கட்அவுட் நடுவில் விஐய் இருக்க அவரது வலதுபுறத்தில், தந்தை பெரியார், காமராஜர், வேலு நாச்சியார் இருக்க இடது புறத்தில் அம்பேத்கர், சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களை அனைவரும் அறிந்திருக்க யார் இந்த அஞ்சலை அம்மாள்.... விஜய் மாநாட்டில் இவரின் கட்அவுட் வந்தது எப்படி பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

1890...இந்தியாவே பிரிட்டிஷ்-ன் அதிகாரத்தால் பீடித்திருந்த சமயம் அது.. அப்போது தமிழ்நாட்டிற்கென ஒரு ஜான்சி ராணியாக பிறப்பெடுத்தார் அஞ்சலை அம்மாள்.. கடலூர் முதுநகரில் சுண்ணாம்புக்காரத் தெருவில் முத்துமணி படையாட்சி - அம்மாக் கண்ணு ஆகியோருக்கு பிறந்தவர்தான் அஞ்சலை.
நெசவுத் தொழிலை மையமாக வைத்து வரும் இக்குடும்பத்தில், ஆங்கிலேயர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் சிறிது ஆங்கிலம் பேச பழகியிருந்தார் முத்துமணி. பெண் பிள்ளைக்கு படிப்பெதற்கு என எண்ணிவிடாமல் இவருடைய இரண்டாம் மகளான அஞ்சலைக்கு தனியாக ஒரு ஆசிரியரை வைத்து தமிழ் மற்றும் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தார். அஞ்சலைக்கும் சிறு வயது முதலே எழுத்து மேல் இருந்தது பற்று. செய்தி ஏடுகள், புத்தகங்கள், மகாகவி பாரதியின் பத்திரிகைகள் என அனைத்தையும் படிக்கும் பழக்கம் அஞ்சலை அம்மாளிடம் இருந்தது. இவர், 1908ம் ஆண்டில் பெரிய நற்குணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகப்பன் என்பவரை திருமணம் செய்தார். இருவரும் நெசவு தொழிலை பழகிக்கொண்டனர்.
இதன்பிறகு பாரதியின் பத்திரிகைகளுக்கு பதில் எழுதுவது, சில சமயங்களில் நிதி வழங்குவது என இருந்ததால், பாரதியுடன் அஞ்சலைக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. தான் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது தெரிந்தும் அஞ்சலை அம்மாளை சந்திக்க 3 முறை பாண்டிசேரியில் இருந்து கடலூருக்கு வந்து சென்றிருக்கிறார் மகாகவி. பாரதியின் வருகை குறித்து கடலூருக்கு 1918ல் வந்து கொண்டிருந்த போது பாரதியார் கைது செய்யப்பட்டார். அப்போது அஞ்சலையும் அவருடைய கணவரும், பாரதியாருக்கு சேவை செய்தனர்.
இதனையடுத்து 1921ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார் காந்தி, அப்போது செப்டம்பர் மாதத்தில் அவர் கடலூருக்கு வந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதில் காந்தியின் பேச்சைக் கேட்டு மணம் திருந்தி குடிபழக்கத்தை அறவே தவிர்த்தார் அஞ்சலையின் கணவர். இதனால் காந்தி மீது அஞ்சலை அம்மாளுக்கு தனி மரியாதை பிறந்தது. இதன் வெளிப்பாடாக காங்கிரஸ் கட்சி வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார் அஞ்சலை.
காந்தி, பாரதியார் மட்டுமல்லாமல், பெரியாருடனும் சேர்ந்து 1922ம் ஆண்டில் கதர் துணி அணிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து போராட்டம் மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறார் அஞ்சலை.
சென்னையில் நடந்த ஆங்கிலேயப் படைத் தளபதி ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம், கடலூரில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டம், அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம், 1940ல் நடந்த தனிநபர் சத்தியாகிரக போராட்டம் இப்படி பல போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறைவாசமும் சென்றிருக்கிறார் அஞ்சலை அம்மாள்.
இதில் குறிப்பிடத்தக்க போராட்டங்களில் ஒன்று ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம். இன்று உத்தரபிரதேசம் என்றழைக்கப்படும் ஐக்கிய மாகாணத்தில் 1857ல் ஆண்டு நடைபெற்ற இந்திய ராணுவ வீரர்கள் கலகத்தை வெறித்தனமாக அடக்கிய வெள்ளைக்கார தளபதி தான் ஜார்ஜ் ஸ்மித் நீல். இவருக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் கட்டடம் எதிரே 12 அடி உயர சிலை நிறுவப்பட்டிருந்தது.
இதனை அகற்றக்கோரி காங்கிரஸ் கட்சி 1927ம் ஆண்டில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் தனது பங்கு இருக்க வேண்டும் என எண்ணிய அஞ்சலை அம்மாள் கடலூரில் இருந்து பெண்களை நிரட்டி சென்னையில் போராட்டம் நடத்தினார். இதனால், அவருக்கு ஒரு வருட சிறை தண்டனையுன் கிடைத்தது. அஞ்சலை அம்மாள் மட்டுமின்று அவருடைய 11 வயது மகள் அம்மாப் பொண்ணுக்கு 4 வருட சிறை தண்டனை, கணவர் முருகப்பனுக்கு 6 மாத சிறை, ஜமதக்னி என்பவர் கைதும் செய்யப்பட்டார். இவர் பின்னாளில் அஞ்சலை அம்மாளின் மகள் அம்மாப் பொண்ணுவை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றது அஞ்சலை அம்மாள் குடும்பத்தில் தான். அப்போது சென்னை வந்திருந்த காந்தி, சிறையில் உள்ள அஞ்சலை அம்மாளை சந்தித்து துணிச்சலாக இருக்கும்படி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சிறையில் இருந்து வெளியான அஞ்சலை மீண்டும் மீண்டும் பல போராட்டங்களை நடத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பிறகு 1931ம் ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் உப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால், கர்ப்பமாக இருந்த அஞ்சலை அம்மாளுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் கர்ப்பிணி என்றும் பாராமல் அவருக்கு பல கொடுமைகள் நடந்தது. பிறகு பரோலில் வெளியே வந்த அஞ்சலை குழந்தை பெற்றெடுத்து ஜெயில் வீரன் என பெயரிட்டு மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
மது ஒழிப்பை தனது மூச்சாக கொண்டிருந்தார் அஞ்சலை அம்மாள். இதற்காக கல்லு கடைக்கு எதிரே போராட்டம் நடத்தியது, உரிமையாளரால் தாக்குதலுக்கு உள்ளாது, தனிச்சிறையில் அடைக்கப்பட்டது என பல கொடுமைகளை அனுபவித்தார் அவர். இத்தனை இருந்தும் மன்னிப்பு கடிதத்தை எழுதி ஆங்கிலேயர்களிடம் அடிப்பணிய மறுத்தார்.
காலம் முழுக்க போராட்டம் சிறை என்று வாழ்த்த அஞ்சலை அம்மாள், அரசியலிலும் கால் பதித்தார். 1937ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடலூர் பெண்கள் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். இதன்பிறகும் பலமுறை கைதாகியிருக்கிறார் அஞ்சலை. 1943ல் எம்.எல்.ஏ என்பதால் தனக்கு கிடைத்த முதல் வகுப்பு சிறையை வேண்டாம் என சொல்லிவிட்டு சாதாரண கைதிகளோடு 3ம் வகுப்பு சிறையில் தங்கினார்.
பிறகு 1946ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு 2வது முறையாக எம்.எல்.ஏ ஆனார். நெசவாளர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு இவருடைய குரல் சட்டமன்றத்தில் கர்ஜித்தது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகினார். ஆனால், கிராமபுற மேம்பாட்டில் முக்கிய பங்காற்றி வந்தார்.
தமிழ்நாட்டிற்காக ஓடி உழைத்த பெண் வீராங்கனையின் கால்கள் 1961 பிப்ரவரி மாதம் 20ம் தேதி ஓய்ந்தது. காலமான தியாகி அஞ்சலை அம்மாளின் உடல் சி.முட்லூரில் அடக்கம் செய்யப்பட்டது. தனது வாழ்நாளில் ஆறை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார் அஞ்சளை அம்மாள். அதோடு பலமுறை ஒரு நாள் தண்டனையையும் அனுபவித்திருக்கிறார்.
இவ்வளவு பெருமைக்கு உரிய அஞ்சலை அம்மாள் வரலாறு பிற்காலத்தில் கடலூர் மக்களுக்கே தெரியாமல் போய்விட்டது. அவருடை குடும்பத்தில் கூட முழுமையாக அறிந்தவர் இல்லை. மூத்த ஊடகவியலாளர் ராஜா வாசுதேவன் 2020- ல் அஞ்சலை அம்மாள் கடைசி மகன் ஜெயில் வீரனை சந்தித்து தகவல்களை திரட்டி , சென்னை மற்றும் டெல்லி ஆவணக்காப்பகங்களில் கிடைத்த தகவல்களைக் கொண்டு அஞ்சலை அம்மாள் என்ற நூலை எழுதி வெளியிட்ட பிறகே அவருடைய போராட்ட வாழ்க்கை வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.
வீடியோவாக பார்க்க: விஜய்யின் மனம் கவர்ந்த அஞ்சலை அம்மாள் யார்?
அதன்பிறகு தமிழ்நாடு அரசு கடலூரில் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு சிலை வைத்தது. இப்போது விஜய் மாநாட்டு முகப்பில் தியாகத் தலைவிக்கு அவருக்கு கட் அவுட் வைத்து பெருமிதப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது தவெக மாநாட்டின் முகப்பில் தியாகத் தலைவி அஞ்சலை அம்மாளுக்கு கட் அவுட் வைத்துள்ளார் விஜய். இப்படி பலரும் அறிந்திடாத ஒரு சுதந்திர போராட்ட வீராங்கனையை கண்டறிந்து தன்னுடைய கட்சி மாநாட்டில் முக்கியத்துவம் அளித்திருப்பது, ’வரலாற்றை கரைத்துக்குடித்திருக்கார்’ விஜய் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?






