குடும்பத்தினருடன் சேர்ந்த ஜானி மாஸ்டர்... “மிஸ் யூ டாடி”.. வைரலாகும் காணொளி!
நான் இன்று வீடு திரும்புவதற்கு என் குடும்பத்தினரின் பிரார்த்தனைதான் காரணம் என ஜாமினில் வெளியே வந்த ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் ஷேக் ஜானி பாஷா. திரையுலகில் ஜானி மாஸ்டர் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில், அரபிக் குத்து பாடலுக்கு கோரியோகிராபி செய்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர், இப்போது பாலியல் வழக்கில் சிக்கி போக்சோவில் கைதானார். அதாவது, சினிமா நடன கலைஞரான இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். தன்னுடைய 16 வயதில் அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதோடு கோவாவில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இதனிடையே ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார். அதேபோல் தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்தும் ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் படத்தில், மேகம் கருக்காதா என்ற பாடலுக்கு கோரியோகிராபி செய்திருந்தார் ஜானி மாஸ்டர். இப்பாடலின் நடன அசைவுகளுக்காக சிறந்த டான்ஸ் மாஸ்டர் என்ற பிரிவில் ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் தான் ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜானி மாஸ்டர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனு கடந்த 24ம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஜுவாடி ஸ்ரீதேவி, ஜானி மாஸ்டருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜாராக வேண்டும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்புகொள்ள முயற்சிக்க கூடாது, வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. வெளிநாடு தப்பிச் செல்லக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜாமின் கிடைத்ததும் தனது குடும்பத்தினரைப் பார்க்க ஜானி மாஸ்டர் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது மனைவி மற்றும் மகன், மகள் அவரை ஓடி வந்து கட்டி அணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்ததில் பேசியிருந்த ஜானி மாஸ்டர், “நான் இன்று வீடு திரும்புவதற்கு என் குடும்பத்தினரின் பிரார்த்தனைதான் காரணம். உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளியே வரும். உண்மை ஒருபோதும் மறைந்து போகாது. என் குடும்பத்தினரை பாதித்த இந்த நாட்கள் என்றென்றும் என் மனதைக் குத்திக் கிழித்துக்கொண்டே இருக்கும்” என தெரிவித்திருந்தார்.
What's Your Reaction?