நயன்தாராவுக்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் - தனுஷின் வழக்கறிஞர் சொல்வது என்ன
நடிகர் தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் தனுஷ் தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா பற்றிய 'நயன்தாரா - பியான்ட் தி பேரி டேல்' என்ற ஆவணப்படத்தின் டிரைலரில் ‛நானும் ரெளடிதான்' திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் 3 வினாடிக்கு இடம்பெற்றுள்ளது. நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கு ரூ10 கோடி உரிமைத்தொகை கொடுக்க வேண்டும் என்று தனுஷ் நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி கரம் பிடித்தனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்த நிலையில், இந்த ஆவணப்படத்தை, கெளதம் மேனன் இயக்கினார். இதையொட்டி படத்தின் ப்ரோமோ அடுத்தடுத்து வெளியான நிலையில், ஆவணப்படம் இன்று ( நவ.18 ) வெளியானது.
இந்த ஆவணப்படம் ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் நீண்ட காலமாக உருவாகி வந்தது. இந்த ஆவணப்படம் நயன்தாராவின் திருமணம் அல்லாது அவரது வாழ்க்கை பயணத்தையும் விவரிப்பதாகவும் இருப்பதாக உள்ளது.
நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தின் பாடலையும், காட்சியையும் தன்னிடம் அனுமதி கேட்காமல் வீடியோவில் பயன்படுத்தியதாகக் கூறி 3 விநாடிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை நயன்தாராவே தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து, நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் அதன் உரிமையாளருக்கே சொந்தமானவை . கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வண்டர்பார் ஃபிலிம்ஸின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் வண்டர்பாரின் யூடியூப் சேனலில் இருப்பதை 10 ஆண்டுகளாக அறியவில்லை என்பதை நயன்தாரா மறுக்க முடியாது. இதன்மூலம் நயன்தாரா ‘நெட்பிளிக்ஸ் இந்தியா’ நிறுவனத்தைத் தவறாக வழிநடத்த முயல்வதாக” கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனுஷ் சார்பில் நயன்தாராவுக்கு நோட்டிஸ் அனுப்பிய வழக்கறிஞர் அருண், நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு தனுஷ் பதிலளிப்பார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று வெளியான 'நயன்தாரா - பியான்ட் தி பேரி டேல்' என்ற ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பாடலும், காட்சிகளும் நீக்கப்படாமல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?