TVK Vijay: “விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லல... இது லாஜிக்கே இல்ல..” எல் முருகன் அட்டாக்!
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்யின் அரசியல் பயணம், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல உள்ளதாக மத்திய அமைச்சர் எல் முருகன் விமர்சித்துள்ளார்.

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி மருத்துவமனையில், தனியார் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பங்கேற்றார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகள் ஆகியோருக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எல் முருகன், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து விமர்சித்துள்ளார்.
முன்னதாக திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டது தரம் வாய்ந்த லேப் டெஸ்டில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பதி லட்டு விவகாரம் பக்தர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு சரியான நேரத்தில் உண்மையை வெளிகொண்டு வந்துள்ளது. கோயில்களில் பக்தர்களின் மனது புண்படும் படி நடந்துள்ளார்கள். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார்.
மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போது அவர்களை உடனடியாக மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டுக்கு முன்னர் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஆனால், மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை. அதேபோல், மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எல்லை தாண்டாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கான ஜிபிஎஸ் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தால் சில நேரம் எல்லை தாண்டிச் செல்லும் சூழல் ஏற்பட்டுவிடுவதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் எல் முருகன், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவிக்காத நடிகர் விஜய், எப்படி அனைவருக்கும் பொதுவானவராக இருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவிக்காத விஜய்யின் அரசியல் பயணம், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல உள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல் முருகன் விமர்சித்துள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவிக்காத விஜய், பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் திடலில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தனது அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பின்னர், விஜய் பொதுவெளியில் வந்து மரியாதை செலுத்தியது பெரியாருக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






