'வரலாற்றில் அழிக்க முடியாத தலைவர்'.. கருணாநிதிக்கு புகழ்மாலை சூட்டிய ராஜ்நாத் சிங்!

சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி தான். தமிழ்நாட்டில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியவர் அவர் தான். வரலாற்றில் அழிக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்த கருணாநிதி, ஒரு மாநிலத்தின் தலைவராக இல்லாமல் தேசிய தலைவராக பார்க்கப்பட்டார்.

Aug 19, 2024 - 06:40
 0
'வரலாற்றில் அழிக்க முடியாத தலைவர்'.. கருணாநிதிக்கு புகழ்மாலை சூட்டிய ராஜ்நாத் சிங்!
Rajnath Singh

சென்னை: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசுக்கு தமிழ்நாடு கடிதம் எழுதி இருந்தது. அதன்படி கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. 

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். அதை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். 

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி விட்டு இந்த விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.

அப்போது விழாவில் தனது பேச்சை தொடங்குவதற்காக வந்த ராஜ்நாத் சிங், பேச்சை தொடங்குவதற்கு முன், ''இந்தியாவின் மரியாதைக்குரிய தலைவர் கருணாநிதிக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டுகிறேன்'' என்று கூறினார். விழாவில் பங்கேற்ற யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ராஜ்நாத் சிங் கூறியதை தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று கைதட்டி கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினார்கள்.

பின்பு பேசிய ராஜ்நாத் சிங், ''முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட்டாட்சி தத்துவத்திற்கு அரும்பாடுபட்டவர்..
நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு ஏற்படாமல் பாதுகாத்தவர். அவரது அரசியல் பயணம் போராட்டம் எப்போதும் துணிச்சல் மிக்கதாக இருந்தது. இந்திய அளவில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த காலத்தில் தலைவராக உருவெடுத்தவர் கருணாநிதி.

சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி தான். தமிழ்நாட்டில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியவர் அவர் தான். வரலாற்றில் அழிக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்த கருணாநிதி, ஒரு மாநிலத்தின் தலைவராக இல்லாமல் தேசிய தலைவராக பார்க்கப்பட்டார். 

விளிம்பு நிலை மக்கள் வரை அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1989ம் ஆண்டிலேயே மகளிருக்கான சுய உதவி குழுக்களைக் கொண்டு வந்தவர். கருணாநிதியின் உழைப்பும் திட்டங்களும் என்றும் பேசப்படும். அவரது வாழ்க்கையில் இருந்து ஏராளமான பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும்'' என்று ராஜ்நாத் சிங் பேசினார்.

ராஜ்நாத் சிங் வெளியிட்ட  கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தின் சிறப்புகள்:-

கருணாநிதி நினைவு நாணயத்தின் ஒரு பக்கத்தில் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகா தூண், ‘சத்யமேவ ஜெயதே’, ‘பாரத்’ ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் ‘இந்தியா’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் கருணாநிதியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு, அதற்கு கீழே அவர் பயன்படுத்திய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் கருணாநிதியின் நூற்றாண்டு (1924 - 2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருக்கும்.

35 கிராம் எடை கொண்ட இந்த ரூ. 100 நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 சதவீதமும் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கு ரூ. 2,500 விலையாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow