அரசியல்

கலைஞரிடம் தமிழ் படித்தவன்.. உதயநிதியின் சாம்ராஜ்யம்.. வைரமுத்து புகழாரம்

கலைஞரிடம் தமிழ் படித்தவன் எப்படி தோற்றுப் போவான் என்று திருச்சி சிவாவின் புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கலைஞரிடம் தமிழ் படித்தவன்.. உதயநிதியின் சாம்ராஜ்யம்.. வைரமுத்து புகழாரம்
உதயநிதியின் சாம்ராஜ்யம் ஒன்றிய அரசின் செங்கலால் கட்டப்பட்டது - கவிஞர் வைரமுத்து

சென்னை கலைவாணர் அரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுதிய நூல்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ், கவிஞர் வைரமுத்து, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் சிறப்புரையாற்றி கவிஞர் வைரமுத்து பேசுகையில், “உதயநிதியின் சாம்ராஜ்யம் ஒவ்வொரு செங்கல்லால் கட்டப்பட்டது அல்ல. உதயநிதியின் சாம்ராஜ்யம் ஒரே செங்கலில் கட்டப்பட்டது, அதுவும் ஒன்றிய அரசின் செங்கலால் கட்டப்பட்டது. அவர் அரசியலிலும், பொது வாழ்விலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டிற்கு மெட்ரோ ரயில், திட்டத்திற்கான நிதி ஒதுக்கவில்லை என்று சொன்னார்கள். தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்கள், நமது முதலமைச்சருக்கு தெரியும் எங்கே தட்ட வேண்டும் எப்படி தட்ட வேண்டும் என்று, அதுபோன்று தற்போது நிதியை அள்ளிக் கொண்டு வந்துள்ளார், அதற்காக ஒன்றிய அரசுக்கும் நன்றி, முதலமைச்சருக்கும் நன்றி, 

திமுகவினர் பிரிவினைவாதி என்று நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தை பற்றி எனக்கு தெரிந்ததை கூறுகிறேன். வ.உ.சி. பற்றி நமக்கு நன்றாக தெரியும். மிகப்பெரிய தியாகி. அவருக்கு அங்கு சிலை வைக்க வேண்டும் என்று கேட்கும் போது, அங்கு ஒரு எம்பி கேட்கிறார், அவர் ஒரு வியாபாரி என்று.

இவர்கள் மத்தியில் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள், அந்த இடத்தில் 100 சிவா வேண்டும். பிரிவினை என்பது வேறு, தனித்துவம் என்பது வேறு என்று எடுத்துக் கூறியவர் சிவா. திருச்சி சிவாவின் சபையில் நான் ரசித்தது ஒன்று உள்ளது. நாடாளுமன்றத்தில் பல தமிழர்கள் சாதனைப் படைத்துள்ளார்கள் என்று பேசுகிறார். அதுவும் தமிழ், ஆங்கிலம் படித்துவிட்டு சாதனை படைத்துள்ளார்கள், அவர்களுக்கு இந்தி தெரியாது என்று பேசி இருக்கிறார்.

நிறைய நேரம் பேச வேண்டும் என்று தான் நினைக்கிறேன், இப்படி ஒரு மேடை கிடைக்குமா? முதலமைச்சர் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார். துணை முதலமைச்சர் வைரமுத்துவை காதலிக்கலாமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தந்தை என்பவன் ஒரு குழந்தைக்கு நம்பிக்கை, நல்லவேளை நீங்கள் ஐஏஎஸ் ஆகவில்லை, ஐஏஎஸ் ஆகியிருந்தால் நீண்ட நேரம் காத்திருப்போர் பட்டியலில் இருந்திருக்க நேரிடும். கலைஞரிடம் தமிழ் படித்தவன் எப்படி தோற்றுப் போவான்” என்றார்.