சினிமா

Director Shankar: “வேள்பாரி நாவல் காட்சிகளை திருடினால் சட்ட நவடிக்கை..” டென்ஷனான இயக்குநர் ஷங்கர்!

தான் உரிமை வாங்கியுள்ள ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகளை, எனது அனுமதியின்றி வேறு யாரும் படமாக்கினால் சட்ட நவடிக்கை எடுக்கவுள்ளதாக இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை செய்துள்ளார்.

Director Shankar: “வேள்பாரி நாவல் காட்சிகளை திருடினால் சட்ட நவடிக்கை..” டென்ஷனான இயக்குநர் ஷங்கர்!
இயக்குநர் ஷங்கர் குற்றச்சாட்டு

சென்னை: கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். ஜென்டில்மேன் தொடங்கி கடைசியாக வெளியான இந்தியன் 2 வரை, ஷங்கர் இயக்கிய அனைத்துப் படங்களுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவானவை தான். கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருந்த இந்தியன் 2 பிரம்மாண்டமாக உருவாகியிருந்தாலும், ரசிகர்களிடம் சுத்தமாக எடுபடவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியன் 3ம் பாகமும், தெலுங்கில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படமும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஷங்கர் போட்டுள்ள ட்விட்டர் பதிவு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சு வெங்கடேசன் எழுதிய நவயுக நாயகன் வேள்பாரி நாவலை சினிமாவாக எடுக்க உரிமை வாங்கியுள்ளேன். ஆனால், இந்த நாவலின் மிக முக்கியமான காட்சிகளை சமீபத்தில் வெளியான சில படங்களின் ட்ரைலரில் பார்க்க முடிந்தது. எனது அனுமதி இல்லாமல் இப்படி பயன்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனிமேல் வேள்பாரி நாவலின் காட்சிகளை படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். படைப்பாளிகளின் உரிமைகளை மதிக்க வேண்டும், இல்லையென்றால் சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என ட்வீட் செய்துள்ளார். 

இயக்குநர் ஷங்கரின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஜஸ்டிஸ் ஃபார் ஷங்கர் என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. விருமன் படத்தில் தான் ஷங்கரின் மகள் அதிதியும் நாயகியாக அறிமுகமானார். இதனால் விருமன் பட விழாவில் இயக்குநர் ஷங்கரும் பங்கேற்றிருந்தார். அதேபோல், எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடசனும் கலந்துகொண்டார்.

விருமன் விழாவில் வேள்பாரி நாவல் குறித்து நடிகர் சூர்யா மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். விரைவில் இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் சு வெங்கடேசன் ஆகியோரது கூட்டணியில் நானும் இணைகிறேன். இதுகுறித்து மிக முக்கியமான அப்டேட் ரசிகர்களுக்காக காத்திருப்பதாகத் தெரிவித்தார். அதேபோல், இயக்குநர் ஷங்கரும் ஒரு பேட்டியின் போது, வேள்பாரி நாவலை சினிமாவாக எடுக்க உரிமை வாங்கிவிட்டதாகக் கூறியிருந்தார். இந்தியன் 3, கேம் சேஞ்சர் படங்கள் வெளியான பின்னரே வேள்பாரி படமாகுமா? அது எப்போது எனத் தெரியவரும்.

இதனிடையே வேள்பாரி நாவலின் காட்சிகள் சில படங்களின் ட்ரைலரில் இருப்பதாக ஷங்கர் குற்றம்சாட்டியுள்ளார். ஷங்கர் கூறியது எந்தப் படம் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. சிலர் சூர்யாவின் கங்குவா டீசராக இருக்கும் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பலர் ஜூனியர் என்டிஆரின் தேவரா ட்ரைலர் தற்போது தான் வெளியானது. அதன்பின்னரே ஷங்கர் இப்படியொரு ட்வீட் போட்டுள்ளார். இதனால் ஷங்கரின் ட்வீட்டுக்கும் தேவரா ட்ரலைருக்கும் தொடர்பிருக்கலாம் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். வேள்பாரி நாவலின் காட்சிகள் எந்தப் படத்தின் ட்ரைலரில் உள்ளது இயக்குநர் ஷங்கரே சொன்னால் தான் உண்மை தெரியவரும்.