ஓய்வுபெற்ற டிஜிபிக்கு முதல்முறையாக முக்கிய பதவி.. யார் இந்த சுனில் குமார்?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Aug 17, 2024 - 20:38
Aug 17, 2024 - 20:40
 0
ஓய்வுபெற்ற டிஜிபிக்கு முதல்முறையாக முக்கிய பதவி.. யார் இந்த சுனில் குமார்?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த டிஜிபி சீமா அகர்வாலை கடந்த 14ஆம் தேதி இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக யாரும் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற டிஜிபியான சுனில்குமாரை நியமித்து தமிழக உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1988ஆம் ஆண்டு ஐபிஎஸ் கேடரான அவர் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியோடு ஓயவு பெற்றார். ஓய்வு பெறும் போது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஜிபியாக பணியாற்றினார்.

சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக சுனில்குமார் பணியாற்றியபோது தான், உடல் உறுப்புகள் சாலை மார்க்கமாக கொண்டு செல்லும் போது பசுமை வழித்தடம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதனை பல மாவட்ட காவல்துறையினர் பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனில்குமார் உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்தவர். 1961ம் ஆண்டு பிறந்தார். எம்.ஏ., எல்.எல்.பி. பட்டங்களை முடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி தெரிந்தவர். இவர், 1988ம் ஆண்டு, ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழக பணிக்காக நியமிக்கப்பட்டார். கூடுதல் எஸ்பியாக வேலூரில் முதன் முதலாக பணியில் நியமிக்கப்பட்டார்.

பின்னர் காவல் துறையின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, மனித உரிமை ஆணையத்திலும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிலும் பணியாற்றினார்.   

ரயில் விபத்து வழக்கு ஒன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். முற்றிலும் அறிவியல்பூர்வமான விசாரணையின் அடிப்படையில் ரயில் என்ஞ்சின் ஓட்டுனரின் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஐந்து அப்பாவிகளின் உயிரைப் பறித்த ஒரு விமான நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் ஏற்படுத்திய விபத்தில், அந்த நபரின் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது.

வாச்சாத்தியில் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்ட காவல் அதிகாரிக்கு உறுதுணையாக நின்றார். சுனில்குமார் ஏற்கனவே சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது 25 சதவீதத்துக்கும் அதிகமான தமிழ்நாடு காவல்படையினரைத் தேர்வு செய்ததில் பங்காற்றி பாராட்டை பெற்றவர். தூத்துக்குடியில் பணியாற்றியபோது சாதி கலவரத்தை கட்டுப்படுத்தி, அமைதியை ஏற்படுத்தினார் என்று காவல்துறை உயர் அதிகாரிகளால் பாராட்டை பெற்றவர்.

இந்த நிலையில் ஓய்வுபெற்ற பிறகும் கூட சுனில்குமாருக்கு மீண்டும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் என்பது சீருடை பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.

அதன்படி காவல் உதவி ஆய்வாளர், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் நிலைய அதிகாரி (ஒருங்கிணைந்த தேர்வு), காவல் உதவி ஆய்வாளர் (தொழில் நுட்பம்), காவல் உதவி ஆய்வாளர் (விரல் ரேகை) தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இரண்டாம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (பொதுத்தேர்வு) உள்ளிட்ட தேர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக காவல்துறையின் அஸ்திவாரத்தை உருவாக்குபவர்களை கண்டறிந்து பணிக்குள் சேர்க்கும் முக்கிய பொறுப்புதான் சுனில் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரி அவர் என்பதால் அவருக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளதை தமிழக உள்துறை அதனை விரிவாக அளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow