சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரம்.. 5 பேர் கைது.. சிபிசிஐடி அதிரடி
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றிய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் ஐந்து பேரை கைது செய்தனர்.

யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் தூய்மை பணியாளர்களை இழிவாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, தூய்மை பணியாளர்கள் என கூறிக் கொண்டு சிலர் அவரது வீட்டில் கழிவு நீர், மலத்தை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வீட்டில் இருந்த சவுக்கு சங்கர் தாயார் கமலாவை மிரட்டிய வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதாவது, சட்டவிரோதமாக கூடி வன்முறையில் ஈடுபடுதல், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், சொத்துக்களை அழித்தல், மிரட்டல், ஆபாசமாக திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையில், “கடந்த 24-ஆம் தேதி காலை சுமார் 9:45 மணியளவில் என் மகன் வீட்டில் இல்லாத சமயத்தில் திடீரென யாரோ வீட்டு கதவை வேகமாக இடிக்கும் சத்தம் கேட்டது. வீட்டிற்கு வெளியில் பலபேர் நின்று கொண்டு ஆக்ரோஷமாக சத்தமிடுவதும் எனக்கு கேட்டதால், பயத்தில் நான் கதவை திறக்காமல் இருந்தேன். சில நிமிடங்களில் என் வீட்டின் பின்கதவை உடைத்து சுமார் 20 பேர்கொண்ட கும்பல் (ஆண்கள் மற்றும் பெண்கள்) என் வீட்டிற்குள் நுழைந்தனர்.
பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய நபர்கள் என்னை பார்த்து மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி இவர் தான் சவுக்கு சங்கர் அம்மா என சொல்லி அடித்தனர். அந்த நபர்கள், வீட்டிலுள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தி அவர்கள் கொண்டு வந்த கழிவுநீரை வீடு முழுவதுமாக ஊற்றினார்கள். அதில் மனித மலம் கலந்திருந்ததை போன்று துர்நாற்றம் வீசியது. அதனை என் படுக்கையறை, சமையலறை, படுக்கை விரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் ஊற்றினார்கள். என் மீதும் ஊற்றினார்கள்.
இந்த முறை இதோட விட்டுடோம், அடுத்தமுறை உன்னை வீட்டிற்குள்ளேயே வைத்து கொளுத்திடுவோம் என என்னை மிரட்டினார்கள். அந்த சமயத்தில் என் மகன் எனக்கு போன் செய்திருந்தார். எனது போனை பிடுங்கிய நபர்கள் எனது மகனை மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, எங்கிருக்கிறாய் என கேட்டு மிரட்டல் விடுத்தனர். மேலும், என் செல்போனையும் பிடுங்கிச் சென்று எங்கள் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து கொண்டு என் மகன் வருகைக்காக காத்துகொண்டிருந்தனர். நான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், காவல் துறையினர் வந்து என் செல்போனை மீட்டு தந்தனர்.
அந்த நேரம் என் மகன் வீட்டில் இருந்திருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். இந்த கும்பலை வழக்கறிஞர் வாணி ஸ்ரீ விஜயகுமார் அழைத்து வந்ததாக அவர்களுக்குள் பேசியதை வைத்து நான் தெரிந்துக்கொண்டேன். உயிர் பயம் ஏற்பட்டு, வீட்டிலேயே பதட்டத்தில் இருந்தேன். என் மகன் சங்கர் வந்து என் நிலைமையை பார்த்து என்னை தேற்றினார்.
கழிவுநீர் வாகனம் வாங்க மத்திய, மாநில அரசுகள் அளித்த மானிய திட்டத்தில் நடந்த ஊழலை பற்றி செய்திகள் வெளியிட்டதால், அதில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த சம்பவத்தின் பின்னால் இருக்கலாம் என சந்தேகமிருப்பதாக சவுக்கு சங்கர் தாயார் தெரிவித்திருந்தார்.
எனது உயிருக்கும், எனது மகன் உயிருக்கும், எங்களின் உடைமைகளுக்கும் ஆபத்தும், அச்சுறுத்தலும் இருப்பதால் குற்றத்தை புரிந்தவர்கள் மீதும், அவர்கள் பின்னணியில் இருக்கும் மற்ற குற்றவாளிகளின் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய செல்வா, கல்யாண், விஜய், பாரதி, தேவி ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் தூய்மை பணியாளர்கள் தானா? யாரின் தூண்டுதலின் பேரில் இவ்வாறு செய்தனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 5 பேருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும், வாணி ஸ்ரீ விஜயகுமார் உள்ளிட்ட பலரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






