TATA IPL 2025: அதிரடி காட்டிய டி காக்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த KKR..!
RR vs KKR: கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2-வது போட்டியிலும் தோல்வியை தழுவியது.

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழாவின் 6-வது லீக் போட்டி கவுகாத்தியில் உள்ள பரஸ்பாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய போட்டி இரு அணிகளின் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆர்.ஆர் அணியின் ஓப்பனர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் நன்றாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், 13 ரன்னில் வைபவ் அரோரா பந்தில் சாம்சன் போல்டானார். தொடர்ந்து, கேப்டன் ரியான் பராக் களமிறங்கி 3 சிக்ஸருடன் 15 பந்தில் 25 ரன்களை எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரில் மொயின் அலி பந்து வீச்சில் ஜெய்ஸ்வால் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக துருவ் ஜூரல் 33 எடுத்தார். நிதிஷ் ராணா 8, வனிது ஹசரங்கா 4, பத்ரிபிரசாத் துபே 9, ஹெட்மயர் 7, ஜோஃப்ரா ஆர்ச்சர் 16 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மகேஷ் தீக்சனா 1 ரன்னிலும், துஷார் தேஷ்பாண்டே 1 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அதிகபட்சமாக மொயின் அலி, வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்பென்சர் ஜான்சன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
152 ரன்கள் இலக்கு
இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதயைடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மொயின் அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே 18 ரன்னிலும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடி காட்டிய குவின்டன் டி காக்
மறுமுனையில் குவின்டன் டி காக் 61 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 97 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன் புள்ளிப்பட்டியல் கொல்கத்தா அணி இடம்பிடித்தது.
What's Your Reaction?






