கல்லூரி மாணவனை கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள்.. பரபரப்பான பகுதி
காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவனை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அடுத்த பெரியார் நத்தம் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன், காஞ்சிபுரத்தில் உள்ள ஆடவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மேல் மதுரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வையாவூர் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் புருஷோத்தமனை மடக்கி, கத்தியை காட்டி மிரட்டி செல்போனை வழிப்பறி செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த புருஷோத்தமன் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஓட முயன்றபோது மர்ம நபர்கள் புருஷோத்தமனின் வயிற்றில் கத்தியால் தாக்கி விட்டு இரு சக்கர வாகனத்தின் டயரையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து தப்பிக்க புருஷோத்தமன் செல்போனை கீழே போட்ட நிலையில் அதனையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த புருஷோத்தமனை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வயிற்றில் ஆழமான வகையில் படுகாயம் ஏற்பட்டதன் காரணமாக அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, புருஷோத்தமன் மருத்துவர்கள் பரிந்துரையின் பெயரில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மற்றும் தாலுகா போலீஸார் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் வையாவூர் சாலையில் மர்ம நபர்கள், கல்லூரி மாணவனை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?






