ஈரோடு இடைத்தேர்தல்: அனுமதியின்றி வாக்கு சேகரித்த நாதகவினர் மீது வழக்கு பதிவு..!
சாலையோரம் பதாகைகளை ஏந்தியாவாறு நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 8 பேர் மீது இரு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால், இவரும் கடந்த ஆண்டு (2024) இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும், வேட்பாளருடன் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்னும் பிரச்சாரத்தை ஆரம்பிக்காத நிலையிலும், சின்னமும் உறுதிசெய்யப்படாத நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியினர் சாலையோரம் பதாகைகளை ஏந்தியவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் காணும் பொங்கலை கொண்டாடிவிட்டு வெளியவந்த பொதுமக்களிடம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு சாலையோரம் நின்றவாறு பதாகைகளை ஏந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சீமான் மற்றும் வேட்பாளர் சீதாலட்சமி புகைப்படத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக நிலை கண்காணிப்பு குழுவினர் அளித்த புகாரின் பேரில், நேற்றிரவு வடக்கு காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் நவநீதன் உள்ளிட்ட 5 பேர் மீதும் , கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் 3 பேர் மீதும் என மொத்தம் 8 பேர் மீது தேர்தல் நடத்தை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
What's Your Reaction?