'கண்டேன் அன்பு முகங்களை’.. அமெரிக்க பயண அனுபவங்களை பகிரும் முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி!

''விமான நிலையத்தில் கிடைத்த அன்பான - மகிழ்வான வரவேற்பைப் பெற்றுக்கொண்ட பின், சான் பிரான்சிஸ்கோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் பல நடந்த பெருமை கொண்ட ஹோட்டல் ஃபேர்மாண்ட்டில் தங்கினேன்''

Sep 16, 2024 - 06:39
 0
'கண்டேன் அன்பு முகங்களை’.. அமெரிக்க பயண அனுபவங்களை பகிரும் முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி!
Tamilnadu CM MK Stalin

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தமது அமெரிக்கப் பயண அனுபவங்களைக் கடிதத் தொகுப்புகளாக எழுதுகிறார். அதன் முதல் பகுதி:

அமெரிக்கப் பயணச் சிறகுகள் (1)

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் அமெரிக்கப் பயண மடல்.

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்கினை நிர்ணயித்து, அதனை அடைதவற்காக உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் குழுவினை உருவாக்கி, நமது மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திட கடந்த மூன்றாண்டுகளாக அயராது பாடுபட்டு வரும் நம் திராவிட மாடல் அரசின் திறன்மிகு முயற்சிகளால் பன்னாட்டு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

இலக்கு பெரியது. அதை அடைவதற்குத் தேவைப்படும் உழைப்பு அளப்பரியது. அதனை உணர்ந்தே திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஆகஸ்ட் 27 அன்று இரவு பயணம் மேற்கொண்டேன். பயணம் வெற்றிகரமாக அமையவேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர்கள், கழகத்தின் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள், கழகத்தின் முன்னணி நிர்வாகிகள், உடன்பிறப்புகள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

விமான நிலையத்தில் ஊடகத்தினரும் ஆர்வத்துடன் குழுமியிருந்து, பயணம் தொடர்பான கேள்விகளைக் கேட்டனர். அவர்களிடம், தொழில் வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு  இதுவரை எடுத்துள்ள முயற்சிகள், நடத்தியுள்ள மாநாடுகள், சந்திப்புகள், வெளிநாட்டுப் பயணங்கள், மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள், அதன் மூலம் கிடைத்துள்ள முதலீடுகள், தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், அதன் விளைவாக உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையைவிடவும் விளக்கமாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் தெளிவாகத்  தெரிவித்துவிட்டு, அமெரிக்கப் பயணத்தின் நோக்கத்தையும்  குறிப்பிட்டேன். ஊடகத்தினரின் அன்பான வாழ்த்துகளுடன் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடான அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டேன்.

பயண நேரத்திலும் தமிழ்நாட்டின் நினைவுகளே!

சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய்க்குச் சென்று, அங்கிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்வதற்கான விமானத்தில் பயணிக்க வேண்டியிருந்தது. 16 மணி நேரப் பயணம். மிக நீண்ட பயணம்தான் என்றாலும், அதிக உயரத்தைத் தாண்ட வேண்டும் என்றால் நீண்ட தூரம் ஓடி வரவேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன சொற்கள்தான் நினைவுக்கு வந்தன. பெருங்கடலுக்கு மேலே பல்லாயிரம் அடி உயரத்தில், மேகங்களைக் கடந்து, வானத்தை உரசுவது போன்ற இந்த நெடும்பயணத்தின்போது, கடந்த மூன்றாண்டு காலத்தில் தொழில் முதலீடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின் விளைவுகள் குறித்த சிந்தனைகளும் உங்களில் ஒருவனான என்னுள் எழுந்தன!

ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து, வளம் மிகுந்த - வாய்ப்புகளை வழங்கும் தன்மை கொண்ட அமெரிக்க நாட்டை நோக்கிய பயணம். இதற்கு முன் மேற்கொண்ட பயணங்களின் விளைவுகளால் உருவான தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பைப் பெற்ற தமிழ்நாட்டுக் குடும்பத்தினரிடம் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, அது மாநிலத்தில் உள்ள மற்றவர்களிடமும் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை இவற்றுக்கேற்ப அமெரிக்கப் பயணமும் அமைய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கின்ற நிலையில், திராவிட மாடல் ஆட்சியில்தான் தமிழ்நாட்டிற்கு மிக அதிகமான முதலீடும், தொழிற்சாலைகளும், அதற்கேற்ற வேலைவாய்ப்புகளும் உருவாகின என்ற நிலையும் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையுடனேயே என் பயணம் தொடர்ந்தது.

ஒரு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, அவர்கள் எதிர்பார்க்கும் தொழிற்கட்டமைப்புகளுடன் நிறுவனத்தின் ஆரம்பக் கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கே பல மாதங்களாகும். நிறுவனத்தைக் கட்டமைத்து, வேலைவாய்ப்புகளை வழங்கி, உற்பத்தியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகள்கூட ஆகும். ஆனால், நமது திராவிட மாடல் அரசில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவாகச் செயல்பாட்டுக்கு வரும் வகையில் தொழிற்துறையில் ஒரு குழுவை அமைத்து, அனுமதி உள்ளிட்டவற்றை விரைந்து நிறைவேற்றி, தமிழ்நாட்டில் பரவலான தொழில்வளர்ச்சியை உருவாக்கியிருக்கிறோம்.

நமது அரசு அமைந்தபோது தொழில்துறைக்குப் பொறுப்பு வகித்து சிறப்பாகச் செயலாற்றியவர் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள். அவருடைய அனுபவமிக்க பணி நிதித்துறைக்குத் தேவைப்பட்டதால், தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற தம்பி டி.ஆர்.பி.ராஜா முனைப்பாகவும் வேகமாகவும் செயலாற்றி, ஒப்பந்தங்களை நிறைவேற்றும் பணியை என் எண்ணத்திற்கேற்ப செயல்படுத்தி வருகிறார். மூன்று முறை தொடர்ச்சியாகச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற அனுபவத்தினாலும், திட்டக்குழு உறுப்பினராக இருந்து சரியான தரவுகளை அறிந்திருப்பதாலும், கழகப் பொருளாளரும் ஒன்றிய முன்னாள் அமைச்சருமான அவருடைய தந்தை டி.ஆர்.பாலு அவர்கள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்குகளுக்காகப் பல வெளிநாடுகளுக்குச் சென்று பங்கேற்ற அனுபவங்களைத் தம்பி டி.ஆர்.பி.ராஜா உள்வாங்கியிருப்பதாலும் என் மனதை அறிந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

இதற்கு முன் வெளிநாடுகளுக்குச் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எந்தளவு நிறைவேறியிருக்கிறது என்பதை அவரிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன்.  என்னிடம் அவர் தெரிவித்த விவரங்களை, சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அவரை விளக்கமாகத் தெரிவிக்கச் சொன்னேன். தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், அதன் மூலமாகக் கிடைத்துள்ள வளர்ச்சி இவை அனைத்தையும் விளக்கி வெள்ளை அறிக்கை போல தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.

தாய்த் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும், தமிழர்களின் வாழ்வு உயர்ந்திட வேண்டும் என்ற இலக்குடனான அமெரிக்கப் பயணத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரத்தை ஆகஸ்ட் 28 அன்று சென்றடைந்தேன். 16 மணிநேரம் ஒரே விமானத்தில் நீண்ட பயணம் என்பது சற்றே களைப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் வரவேற்பளிப்பதற்காகக் காத்திருந்த தமிழர்களின் முகங்களைப் பார்த்ததும், பனித்துளிகளில் நனைந்த பூக்களைப் போல உற்சாகம் கொண்டேன்.  

கண்டேன் தமிழர்களின் அன்பு முகங்களை!

சான் பிரான்சிஸ்கோவில் இந்தியத் தூதரக அதிகாரி திரு. ஸ்ரீகர் ரெட்டி அவர்கள் அன்பான வரவேற்பை அளித்தார். தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் அமெரிக்காவில் வசிக்கும் தன் மகனைப் பார்ப்பதற்காக வந்திருந்தவர், விமான நிலையத்திற்கு வந்து அன்புடன் வரவேற்றார். தமிழ்த்திரையில் புகழ்பெற்ற நடிகரான நெப்போலியன் அவர்களும் வரவேற்பளித்தார். சில நாட்களுக்கு முன்புதான் தன் மகனுக்குத் திருமணம் உறுதியாகியிருப்பதையடுத்து அழைப்பிதழைத் தருவதற்காகச் சென்னையில் என் இல்லத்திற்கு அவர் வந்திருந்தார். சான் பிரான்சிஸ்கோவிலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாய்மண்ணிலிருந்து முதலமைச்சர் வந்திருக்கிறார் என்ற உணர்வுடன் விமான நிலையத்திற்குக் குடும்பத்துடன் வருகை தந்து அன்பான வரவேற்பை அளித்தனர். 

அவர்களின் வரவேற்பு எனக்கு ஆச்சரியத்தையும் சற்று தயக்கத்தையும் ஏற்படுத்தியது. காரணம், விமான நிலையத்தில் இருந்த அமெரிக்கர்களும் பிற நாட்டவர்களும், இத்தனை பேர் திரண்டு நின்று யாரை வரவேற்கிறார்கள் என்று எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் விமான நிலையத்திலேயே, மரபும் நவீனமும் கலந்த நடன அசைவில், முத்தமிழறிஞர் கலைஞர் எழுதி, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, ‘செம்மொழியான தமிழ் மொழியாம்..’ பாடலுக்கும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டு மக்களின் இதயத்தின் ரீங்காரமாக அமைந்த, ‘ஸ்டாலின்தான் வராரு’ பாடலுக்கும் நடனமாடி வரவேற்று அன்பைப் பொழிந்தனர்.

விமான நிலையத்தில் கிடைத்த அன்பான - மகிழ்வான வரவேற்பைப் பெற்றுக்கொண்ட பின், சான் பிரான்சிஸ்கோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் பல நடந்த பெருமை கொண்ட ஹோட்டல் ஃபேர்மாண்ட்டில் தங்கினேன்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சான்பிரான்சிஸ்கோ!

1906-ஆம் ஆண்டு பெருமளவில் கட்டி முடிக்கப்பட்டு விட்ட இந்தக் கட்டடம் அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிதும் சேதமடைந்திருக்கிறது. எனினும், ஜூலியா மார்கன் எனும் புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநரின் துணையுடன் அது புனரமைக்கப்பட்டு 1907-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ நகரையே பெரும் அழிவுக்குள்ளாக்கிய நிலநடுக்கத்தில் இருந்து அந்நகரம் எப்படி மீண்டு மேலெழுந்து வந்தது என்பதற்கான வாழும் சாட்சியமாக இன்றளவும் இந்த ஓட்டல் திகழ்கிறது. ஐ.நா. சாசன உருவாக்கமும் இங்கு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கான தேசிய பதிவேட்டிலும் இது இடம்பெற்றுள்ளது. மேற்கத்திய இசையுலகின் புகழ்பெற்ற கிராமி விருதுகளைப் பல முறை வென்றுள்ள பிரபல பாடகரும் மனித உரிமைக்கான ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்தின் விருது பெற்றவருமான டோனி பென்னட், “I Left My Heart in San Francisco” என்ற தன்னுடைய புகழ்பெற்ற பாடலை முதன்முதலில் இந்த ஹோட்டலில்தான் பாடியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு அவரது 90-ஆவது வயதில் ஃபேர்மாண்ட் ஹோட்டலின் வெளியே அவரது சிலை, அவரது முன்னிலையிலேயே திறந்து வைக்கப்பட்டது.

சான் பிரான்சிஸ்கோ நகரம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ளது. சமூகநீதிக்கும், மனித உரிமைக்குமான குரல்களும் அதன் விளைவான சட்டங்களும் கலிபோர்னியா மாநிலத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டில் தனித்துவமான அடையாளத்துடன் வெளிப்படுத்துகிறது. நீண்டகாலமாக இங்கு ஜனநாயகக் கட்சியின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. அமெரிக்காவுக்கு இதற்கு முன் நான் பயணித்திருந்தாலும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மேற்கொண்ட பயணத்தில் முதலில் சென்று இறங்கியது கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோவாக அமைந்தது.

தொடர்ச்சியான விமானப் பயணமும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான நேர வித்தியாசமும் களைப்பை ஏற்படுத்தியிருந்ததால் அன்றிரவு நன்றாக ஓய்வெடுத்துவிட்டு, மறுநாள் வழக்கம்போல அதிகாலையில் எழுந்துவிட்டேன். வெளியே குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனால், உள்ளே இருந்த உடற்பயிற்சிக் கூடத்திலேயே ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை முடித்துவிட்டு, முதலீட்டாளர்கள் சந்திப்பிற்கு ஆயத்தமானேன்.. என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow