'இன்ஸ்டாகிராம்' மூலம் கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி... என்ன காரணம்?
Dubai Princess Sheikha Mahra Announced Divorce : சில மாதங்களுக்கு முன்பு ஷேகா மஹராவும் அவரது கணவரும் பேசிக் கொள்வதை நிறுத்தி விட்டதாகவும், தாங்கள் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Dubai Princess Sheikha Mahra Announced Divorce
1994 ஆம் ஆண்டில் பிறந்த ஷேகா மஹராவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முஹம்மது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் வெகுவிமரிசையாக நடந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்தது.
துபாயின் இளவரசியும், அவரது கணவரும் இல்லற வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து வந்தனர். இவர்களுக்கு இந்த ஆண்டு மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'மஹரா' என தாயின் பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில், துபாயின் இளவரசி ஷேகா மஹரா, தனது கணவர் ஷேக் மனா பின் முஹம்மது பின் ரஷித் பின் மனா அல் மக்தூனை விவாகரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அதுவும் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அவர் விவாகரத்து அறிவித்துள்ளது உலகம் முழுவதும் பேசும்பொருளாகி உள்ளது.
அதாவது இளவரசி ஷேகா மஹரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''அன்புள்ள கணவரே... நீங்கள் மற்ற தோழர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறீர்கள். இதன்மூலம் நமது விவாகரத்து முடிவை இங்கு அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி'' என்று கூறியுள்ளார்.
துபாயின் இளவரசி ஷேகா மஹராவும், அவரது கணவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக இருவரது வாழ்க்கையிலும் புயல் வீசியுள்ளது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பேசிக் கொள்வதை நிறுத்தி விட்டதாகவும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, தாங்கள் எடுத்த போட்டோக்களை நீக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
துபாயின் இளவரசியின் முடிவு குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ''மிகவும் சோகமான செய்தி. இந்த முடிவை ஏன் எடுத்தார் என்று தெரியவில்லை. இளவரசி கொஞ்சம் யோசித்து முடிவெடுத்து இருக்கலாம்'' என்று ஒருதரப்பினரும், ''உங்கள் விவாகரத்து முடிவை பார்த்து பெருமைப்படுகிறோம். எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்'' என்று வேறு சிலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
What's Your Reaction?