மொரிஷியஸ் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. விமான நிலையம் கொடுத்த அப்டேட்
மொரிஷியஸ் நாட்டில் புயல் வீசுவதால் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு மொரிஷியஸ் நாட்டில் இருந்து சனிக்கிழமை தோறும் அதிகாலை 1:50 மணிக்கு ஏர் மொரிஷியஸ் விமானம் வருகை தரும் நிலையில் மீண்டும் அதிகாலை 3.35 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும்.
மொரிஷியஸ் நாட்டில் மருத்துவம், பொறியியல் சார்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் பல இருப்பதால் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாணவ - மாணவிகள் மொரிஷியஸில் தங்கி இருந்து உயர்கல்வி படித்து வருகின்றனர். இதனால் ஏர் மொரிஷியஸ் விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதேபோல் இன்று அதிகாலை 3:50 மணிக்கு, சென்னையில் இருந்து மொரிஷியஸ் செல்ல இருந்த விமானத்தில் பயணிப்பதற்கு 277 பயணிகள் இருந்தனர். ஆனால் மொரிஷியஸிலிருந்து அதிகாலை 1.50 மணிக்கு சென்னை வரவேண்டிய ஏர் மொரிஷியஸ் விமானம் வரவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
அதாவது, மொரிஷியஸ் நாட்டில் கடுமையான சூறைக்காற்று, புயலுடன் மோசமான வானிலை நிலவுவதால் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து பயணிகளிடம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், ஏர் மொரிஷியஸ் விமானம் நாளை (மார்ச் 2) அதிகாலை, சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னையில் இருந்து மொரிஷியஸ் புறப்பட்டுச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "மொரிஷியஸில் மோசமான வானிலை நிலவுவதால் அங்கிருந்து சென்னை வரும் விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து மொரிஷியஸ் செல்லும் விமானம் ஆகிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகளுக்கு ஏற்கனவே அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு கிடைக்காத பயணிகள், விமான நிலையத்திற்கு வந்து விட்டனர்.
அவர்களுக்கு தகவல் தெரிவித்து, நாளை வந்து பயணம் செய்யும்படி அறிவுறுத்தினோம். இயற்கையால் ஏற்பட்ட பாதிப்புக்கு, எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று கூறுகின்றனர்" என்று தெரிவித்தனர்.
இதுமட்டுமல்லாமல், மொரிஷியஸ் நாட்டு முன்னாள் துணை அதிபர் பரமசிவம் வையாபுரி, மொரிஷியஸ் நாட்டிலிருந்து சென்னைக்கு வருவதாக இருந்தது. ஆனால் விமானம் ரத்து காரணமாக அவருடைய சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.
What's Your Reaction?






