Intel Company Layoffs 2024 Announced : பொருளாதார நெருக்கடி, அனைத்து துறைகளிலும் ஏஐ (AI) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் புகுந்தது ஆகியவற்றின் காரணமாக உலகளவில் முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சிப் (CHIP) தயாரிக்கும் நிறுவனமான இன்டெல் (Intel) அதிரடியாக பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதாவது சுமார் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக இன்டெல் அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 15% ஆகும்.
2025ம் ஆண்டு சுமார் 10 மில்லியன் டாலர் செலவுகளை குறைத்து, நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வற்காக இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பேட்ரிக் பி. கெல்சிங்கர், ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பிய செய்தியில், ''நம்முடைய நிறுவனத்தின் வருமானம் நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் உயரவில்லை. பல்வேறு தரப்பில் இருந்தும் நாம் முழுமையான பலன்களை பெறவில்லை.
நமது நிறுவனத்தின் செலவுகள் அதிகமாக உள்ளன. ஆனால் வரவு மிகவும் குறைவாக உள்ளது. ஆகவே நமது நிறுவனத்தின் செலவு கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. எனவே ஊழியர்கள் பணிநீக்கம் என்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு நானும், இன்டெல் நிறுவனமும் தள்ளப்பட்டுள்ளோம். என்னுடைய வாழ்க்கையில் நான் எடுத்த மிகவும் கடினமான முடிவு இதுவாகும்'' என்று பேட்ரிக் பி. கெல்சிங்கர் கூறியுள்ளார்.
இன்டெல் நிறுவனம் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ள 15,000 ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் படிப்படியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாத காலாண்டு முடிவில் இன்டெல் நிறுவனம் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை பதிவு செய்து இருந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் பங்குகளும் 19% வரை சரிவை சந்தித்தன. இதனால் மீண்டும் நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இன்டெல் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
இதேபோல் அமெரிக்காவை சேர்ந்த வீடியோ கேம் நிறுவனமான பங்கி (Bungie) 220 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது. மகப்பேறு விடுமுறையில் வீட்டில் இருக்கும் பெண்களும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செலவுகளை குறைக்கும் வகையில் இந்த பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பங்கி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பங்கி நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் புலம்பி தீர்த்து வருகின்றனர். உலகின் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருவதால் ஊழியர்கள் அச்சத்தில் உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Intel's 15,000 layoffs, citing "margins are too low," comes five months after the Biden administration's CHIPS Act gave it an $8.5 billion gift, $11 billion in favorable loans, and $25 billion in tax cuts, on the promise to hire 10,000 people.https://t.co/qB4a2oapAl https://t.co/wWNUZeIXQq pic.twitter.com/5GVtY9M029
— Y Disassembler (@loomdoop) August 2, 2024