சென்னை விமான நிலையத்தை அலற விட்ட அமெரிக்க பயணி... தடை செய்யப்பட்ட பொருளை அசால்ட்டாக எடுத்து வந்ததால் பரபரப்பு!
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூருக்கு புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டேவிட் (55) என்ற பயணி சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அவருடைய உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்த போது சேட்டிலைட் போன் ஒன்றை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக சேட்டிலைட் போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் சேட்டிலைட் போன் எடுத்து வந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் அதை வாங்கி வைத்துக் கொண்டு, ரசீது கொடுத்து விடுவார்கள். பயணி இந்தியாவில் இருந்து திரும்பி செல்லும்போது போனை திருப்பிக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்திய நாட்டிற்கு வெளிநாட்டவர்கள் உட்பட யாரும் சேட்டிலைட் போன் உபயோகிக்கத் தடை உள்ளது. ஆனால் அமெரிக்க பயணி தடையை மீறி சேட்டிலைட் போன் வைத்திருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.
பாதுகாப்பதிகாரிகள் அமெரிக்க பயணி டேவிட்டிடம் விசாரணை நடத்தினர். அப்போது டேவிட், தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து விமானத்தில் அந்தமானுக்கு சுற்றுலா பயணியாக வந்ததாகவும் அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டு, இப்போது சிங்கப்பூர் புறப்பட்டு செல்வதாகவும், அமெரிக்காவில் இருந்து வரும் போது சேட்டிலைட் போனை எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், “நான் சாட்டிலைட் போன் வைத்திருந்ததை எந்த விமான நிலையத்திலும் யாரும் தடுக்கவில்லை. எங்களுடைய நாட்டில் சேட்டிலைட் போனுக்கு எந்த தடையும் இல்லை. எனவே நான் எடுத்து வந்தேன்” என்று கூறினார். ஆனால் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அமெரிக்க பயணியின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். அவர் வைத்திருந்த சேட்டிலைட் போனையும் பறிமுதல் செய்தனர்.
அதன் பின்பு அமெரிக்க பயணி டேவிட்டையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த சேட்டிலைட் போனையும், பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இது சம்பந்தமாக அமெரிக்கா பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அமெரிக்க பயணி ஒருவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவத்தை சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரக அலுவலகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?