தமிழ்நாடு

காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளியால் பரபரப்பு!

சென்னை எம்.கே.பி நகர் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி குற்றவாளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளியால் பரபரப்பு!
உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளி கைது

சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு மர்ம நபர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர், 2 காவலர்களுடன் நேற்று (பிப். 28) வியாசர்பாடி, பி.வி.காலனி, பீலிக்கான் முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள புற்றுக்கோயில் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பையுடன் நின்றிருந்த நபர் ஒருவர் போலீஸை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை காவல்  குழுவினர் விரட்டிச் சென்றபோது, அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியைக் காட்டி மிரட்டினார். உடனே உதவி ஆய்வாளர் அந்த நபரை பிடிக்க அருகில் சென்றபோது, அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் உதவி ஆய்வாளரின் தலையை நோக்கி வெட்டியதில் அருகிலிருந்த காவலர், உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு காப்பாற்றினார்.

உடனே, அந்த நபர் தப்பியோடியபோது, காவல் குழுவினர் துரத்திச் சென்று அந்த நபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் பிடிபட்ட நபரை மேல் நடவடிக்கைக்காக P-5 எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

P-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் அருண்பாண்டியன் என்பதும் அவர் வியாசர்பாடி பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், P-5 எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கஞ்சா, ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அருண்பாண்டியனை போலீசார் கைது செய்தனர். 

அவரிடமிருந்து 1.05 கிலோ கஞ்சா மற்றும் ஒரு பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கைது செய்யப்பட்ட அருண்பாண்டியன் P-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது ஏற்கனவே 3 கொலை உட்பட சுமார் 9 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.