பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு.. டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதம்

பாரிஸில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவில் டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

Feb 12, 2025 - 14:43
 0
பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு.. டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதம்
சுந்தர் பிச்சை-நரேந்திர மோடி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11-ஆம் தேதி  அரசு முறை பயணமாக பாரிஸ் சென்றார். இவருக்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் விருந்து அளித்தார். பாரிஸில் நடைபெற்ற இரண்டாவது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இதில் பேசிய அவர், “ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பறிபோகாது. புதிய வகை வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இளம் தலைமுறையினருக்கு திறன்சார் பயிற்சி வழங்க வேண்டும். உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ஏஐ தொழில்நுட்ப நிபுணர்கள் மிக அதிகமாக உள்ளனர். இப்போது ஏஐ தொழில்நுட்ப யுகத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். 

நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் திறவுகோல் நம்மிடமே இருக்கிறது. இந்த பொறுப்புணர்வு நம்மை சரியான பாதையில் வழிநடத்தும். பாரிஸை தொடர்ந்து ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான அடுத்த சர்வதேச மாநாடு இந்தியாவில் நடத்தப்படும்.” என்று கூறினார். இந்த மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் டிங் சூயெக்ஸியாங் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும், மைக்ரோசாப்ட், கூகுள், ஓபன் ஏஐ உட்பட பல்வேறு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் மாநாட்டில் பங்கேற்றனர்.  இதன் பின்னர் ஹோட்டலுக்கு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி  இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசினார்.  அதுமட்டுமல்லாமல், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதன்படி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை இன்று சந்தித்து பேசினார். 

மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் சுந்தர் பிச்சை பேசியதாவது, பாரிஸ் நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்தபோது, அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை இன்று சந்தித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டு வர கூடிய வியக்கத்தக்க வாய்ப்புகளை பற்றியும், இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றத்திற்காக நாம் நெருங்கி பணியாற்றுவதற்கான வழிகளை பற்றியும் விவாதித்தோம் என கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து இன்று அமெரிக்கா செல்கிறார். நாளை (பிப். 13) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow