அரசியல்

தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே.. சி.வி. சண்முகம் ஆதங்கம்

பதிவு செய்யப்பட்ட கட்சி தெரிவித்த  மாற்றத்தை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி , தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே.. சி.வி. சண்முகம் ஆதங்கம்
சி.வி.சண்முகம்

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இன்று  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் , உறுப்பினராக இல்லாதவர்கள் அதிமுக போர்வையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி என்பவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர். தேர்தல் ஆணையம் எங்களிடம் கருத்துகளை கேட்டபோது கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக சார்பில் பதில் அளித்தோம். 

சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினர் அல்ல எனவே அவரது மனுவை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தோம். சூரியமூர்த்தி என்பவர்  கட்சி ரீதியாக கேட்டுள்ள உட்கட்சி நிவாரணங்கள் முறையற்றது. தேர்தல் ஆணையத்திற்கு அது குறித்து விசாரிக்க அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணைத்திடம் கூறிவிட்டோம். தேர்தல் ஆணையம் இரு தவறுகளை செய்திருந்தது . 

வழக்கு தொடர்ந்தவர் சூரியமூர்த்தி என்ற தனி நபர். ஆனால், தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி அதிமுகவின் பதிலை பெற்ற பிறகு அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்ட , வெளியேற்றப்பட்ட சில தற்குறிகளின் கருத்துகளையும் கேட்டது. அதிகாரம் இல்லாதபோதும் விசாரணை மேற்கொண்டது தேர்தல் ஆணையம். அதை எதிர்த்து அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் உட்கட்சி விவகாரத்தை விசாரணைக்கு ஏற்க கூடாது என்ற இரண்டு அம்சங்கள்தான் அதிமுகவின் மனுவில் இருந்தன. எங்கள் கோரிக்கையை ஏற்கனவே விசாரணையின் தொடக்கத்திலேயே நீதிமன்றம் ஏற்றது.  உட்கட்சி விவகாரங்கள் குறித்து விசாரிக்க தனக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை தேர்தல் ஆணையம் முதலில் முடிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு  இரண்டு அதிகாரங்கள் மட்டுமே உண்டு.  தேர்தல் ஆணைய விதி 29A-ன் படி புதிய அரசியல் கட்சியை பதிவு செய்ய , அந்த  கட்சியின் சட்ட திட்டத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் . தேர்தல் ஆணையம் புதிய கட்சியின் சட்ட திட்டங்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை பார்த்து , அதை அங்கீகரிக்கும் அதிகாரம் உண்டு. 

தேர்தல் ஆணைய விதி 29A9-ன் படி  அங்கீகரிக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட கட்சி அக்கட்சியின் பொறுப்பாளர் , அலுவலக முகவரி , சட்ட திட்ட  மாற்றங்களை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அது சரியா? தவறா? என விசாரிக்கும்  அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. தெரிவிக்கப்பட்ட மாற்றத்தை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி , தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே.

கட்சி விதிகளில் குறைகள் இருந்தால் நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும். தேர்தல் ஆணையத்தால்  விசாரிக்க முடியாது. கட்சியில் பிளவு ஏற்பட்டால்  எந்த குழு உண்மையிலேயே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது  என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியும். உட்கட்சி  விவகாரங்களில் தலையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் விசாரணையின்போது ஒத்துக் கொண்டுள்ளது.

கட்சிக்கு தொடர்பற்ற துரோகிகளின் மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரம் உண்டா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்து கொள்ள வேண்டும். விசாரணை நடத்தும் அதிகாரம் உண்டா என்பதை தேர்தல் ஆணையம் முதலில் முடிவு செய்ய வேண்டும் என்றே நீதிமன்றம் கூறியுள்ளது. அதிகாரம் இருந்தாலும் மூல வழக்கில்தான் பார்த்து கொள்ள முடியும். சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையிலேயே முடிவெடுப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது. 

உட்கட்சி விவகாரங்களில் தலையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை   தேர்தல் ஆணையமே ஒத்துக் கொண்டுள்ளது. புகழேந்தி யார்? ஓபிஎஸ் கையெழுத்து இட்டு நீக்கியவர் புகழேந்தி. அவர் இன்று அதிமுகவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் ஏன் விசாரணை நடத்த வேண்டும்.

தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை . ஆனால் தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்து செயல்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அதிமுக வாதங்கள் முழுவதுமாக இன்று ஏற்கப்பட்டுள்ளன. மூல வழக்கை பொறுத்தே எங்கள் முடிவு இருக்கும் என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறி விட்டார். தேர்தல் ஆணையம் தவறாக முடிவெடுத்தால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என்று கூறினார்.