இளைஞர்களின் 'ரோல் மாடல்' ஆம்ஸ்ட்ராங்... அஞ்சலி செலுத்திய இயக்குநர் வெற்றி மாறன் உருக்கம்!
''ஆம்ஸ்ட்ராங் பெரிய ஆளுமை. அவரது மறைவு எல்லாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆம்ஸ்ட்ராங் உதவியால் ஏராளமான இளைஞர்கள் படித்து முன்னேறியுள்ளனர்''
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் இரவு அயனாவரத்தில் உள்ள தனது வீட்டின் அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தவறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரும் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இயக்குநர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து கதறி அழுதார்.
ஆம்ஸ்ட்ராங் உடலின் பிரேத பரிசோதனை முடிந்து சென்னை அயனவரத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்பு அங்கிருந்து பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள், பகுஜன் சமாஜ் நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல இயக்குநர் வெற்றி மாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ''ஆம்ஸ்ட்ராங் பெரிய ஆளுமை. அவரது மறைவு எல்லாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆம்ஸ்ட்ராங் உதவியால் ஏராளமான இளைஞர்கள் படித்து முன்னேறியுள்ளனர்.
அவரை ரோல் மாடலாக கொண்டு படித்து முன்னேறியவர்கள் ஏராளம் உண்டு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது'' என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள் வெற்றி மாறனிடம், 'ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும்' என எழும் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த அவர், ''ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது அவர் குடும்பத்தின், கட்சி நிர்வாகிகளின் விருப்பம். இது கருத்து நீதிமன்றம் முடிவு செய்யும்'' என்று கூறினார்.
இதேபோல் நடிகர் தீனாவும் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்பு பேசிய அவர், ''நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். எங்களுக்கு ஜாதி கிடையாது. நாங்கள் சாதி,மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்து மனிதநேயத்தை மையமாக வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எங்கள் பூர்வக்குடி மக்களின் எழுச்சி நாயகன் ஆம்ஸ்ட்ராங். எங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அண்ணன் ஆம்ஸ்ட்ராங் இருந்தவரை எங்களுக்கு எல்லாமே இருந்தது. ஆனால், இப்போது மீண்டும் 100 ஆண்டுகளுக்கு பின்னால் சென்றது போன்று ஒரு பயம் வந்து விட்டது'' என்று தீனா கூறியுள்ளார்.
What's Your Reaction?