Bloddy Begger: ”கவின் வேண்டாம்ன்னு சொன்னேன்..” பிளடி பெக்கர் மேடையில் நெல்சன் ஓபன் டாக்!
கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் கவின் நடிப்பு குறித்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பேசியது வைரலாகி வருகிறது.
சென்னை: சீரியல் பிரபலமாக வலம் வந்த கவின், தற்போது கோலிவுட்டின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். சீரியல், பிக் பாஸ், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என மெல்ல மெல்ல சினிமாவில் அடியெடுத்து வைத்த கவின், டாடா திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் கவினுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இளன் இயக்கத்தில் வெளியான ஸ்டார் படத்திலும் தனது நடிப்பால் ஸ்கோர் செய்திருந்தார் கவின். இந்த வரிசையில் அடுத்து ஒரு ஹிட் கொடுக்க காத்திருக்கும் கவின் நடிப்பில், பிளடி பெக்கர் திரைப்படம் ரிலீஸாகிறது.
சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படங்களுடன் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது பிளடி பெக்கர். சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகந்தா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், பிளடி பெக்கர் ட்ரெய்லர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்துள்ளது. இதில் கவின் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்துள்ளதும் படத்துக்கு செம ஹைப் கொடுத்துள்ளது.
பிளடி பெக்கர் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நெல்சன், இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சிவபாலன் சொன்ன நேரம், நான் ஜெயிலர் படம் இயக்கிக் கொண்டிருந்தேன். ஜெயிலர் ஹிட்டானால் மட்டுமே பிளடி பெக்கர் படத்தை தயாரிப்பேன், ஆவரேஜ்ஜாக போனால் கஷ்டம் என கூறியிருந்தேன். ஆனாலும் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தபோது, ஹீரோ கேரக்டரில் கவின் வேண்டாம் என கூறினேன். படத்தின் பிஸினஸுக்கு கவினின் ஸ்டார் வேல்யூ கை கொடுக்காது, அதனால் தனுஷ் அல்லது விஜய் சேதுபதியிடம் இந்த கதையை கொண்டு போகலாம் என இயக்குநரிடம் சொன்னேன்.
நட்புக்காக கவினை நடிக்க வைக்க வேண்டாம், இந்த கதை நன்றாக வரவேண்டும் என நினைத்தேன். ஆனால், கவின் தான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குநர் சிவபாலன் பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியே இல்லாமல் ஓக்கே சொன்னேன். இப்போது படம் முடிந்ததும் முழுவதுமாக பார்த்தேன். அதில் கவினின் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன். எனது முடிவு தவறு என்பதை கவின் தனது நடிப்பால் புரிய வைத்துவிட்டான். பிளடி பெக்கர் கண்டிப்பாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என நெல்சன் பேசினார்.
பிளடி பெக்கரில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லியும் கவின் ஆக்டிங் குறித்து பாசிட்டிவாக பேசியது படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. இதன்மூலம் கவின் கரியரில் பிளடி பெக்கர் மிக முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?