Bose Venkat: சார் படம் ரிலீஸான அதேநாளில் இப்படியொரு துக்கமா..! சோகத்தில் போஸ் வெங்கட் குடும்பம்!

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்டின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Oct 19, 2024 - 22:08
 0
Bose Venkat: சார் படம் ரிலீஸான அதேநாளில் இப்படியொரு துக்கமா..! சோகத்தில் போஸ் வெங்கட் குடும்பம்!
போஸ் வெங்கட் தாயார் மறைவு

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் போஸ் வெங்கட். இந்த சீரியலில் ‘போஸ்’ என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம், ரசிகர்கள் மத்தியில் போஸ் வெங்கட்டாக வலம் வரத் தொடங்கினார். சீரியலை தொடர்ந்து சினிமாவிலும் நடிக்கத் தொடங்கிய போஸ் வெங்கட், முதலில் கன்னி மாடம் என்ற படத்தை இயக்கினார். 2020ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் போஸ் வெங்கட். 

இந்நிலையில், விமல், சாயா தேவி நடிப்பில் போஸ் வெங்கட் இயக்கிய சார் திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த சார், தற்போது திரையரங்குகளில் வெளியானதை அடுத்து மகிழ்ச்சியில் இருந்தார் இயக்குநர் போஸ் வெங்கட். ஆனால், அதேநாளில் போஸ் வெங்கட்டின் தாயார் மறைந்தது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

83 வயதான போஸ் வெங்கட்டின் தாயார் ராஜாமணி, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போஸ் வெங்கட் அம்மாவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான அறந்தாங்கியில் இன்று நடைபெற்றது. இந்தச் சம்பவம் குறித்த அறிந்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் போஸ் வெங்கட் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளரும் - சமூகப் பொறுப்புணர்வுமிக்க இயக்குநரும் - நடிகருமான போஸ் வெங்கட்டின் தாயார் ராஜாமணி அம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வேதனையடைந்தேன். அரவணைத்து ஆளாக்கிய அன்னையை இழந்து நிற்கும் போஸ் வெங்கட்க்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

அதேபோல், விசிக தலைவர் தொல் திருமாவளவன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “இயக்குநர் போஸ் வெங்கட்டின் அருமை தாயார் அன்னை இராஜாமணி காலமானார் என்பதையறிந்து மிகவும் துயருறுகிறேன். தாயை இழந்து துக்கத்தில் வீழ்ந்து உழலும் அன்பு இளவல் போஸ் வெங்கட்டுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார். போஸ் வெங்கட் இயக்கிய இரண்டாவது படம் வெளியான அதேநாளில் அவரது தாயார் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow