வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. ராஜேந்திர பாலாஜி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, புகார்தாரரான முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், ராஜேந்திர பலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதிக்கோரிய விண்ணப்பம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும் அரசு குற்றவியல் வழக்கறிஞர் கூறினார்.
இதனையடுத்து, இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே இதனை தள்ளுபடி செய்வதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு மனுத்தாக்கல் செய்யலாம் எனக்கூறினார்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதனையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள அனுமதி அளித்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?






