குடிசை வீடு.. அப்பாவுக்கு யானைக்கால் நோய்.. பள்ளி மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தஞ்சை MP
ஏழ்மை நிலையிலுள்ள பள்ளி மாணவிக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ததோடு, உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி சித்துக்காடு கிராமத்தை சேர்ந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார் நித்திய ஸ்ரீ என்ற மாணவி. இவரது தாயார் இறந்த நிலையில், தந்தையோ யானைக்கால் நோயால் பாதிப்படைந்து அவதியுற்று வருகிறார். நித்திய ஸ்ரீ-யின் தந்தை ரெங்கசாமி 100 நாள் வேலைக்கு சென்று கிடைக்கும் வருவாயை கொண்டு தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில், நித்திய ஸ்ரீ தன் குடும்பத்தின் நிலையினை எடுத்துரைத்து, தானும் தன் தம்பியும் பள்ளியில் வழங்கும் மதிய உணவினை தான் நம்பியுள்ளோம் என்று குறிப்பிட்டு இருந்தார். சிறு குடிசையில் வசித்து வரும் நித்திய ஸ்ரீ, விளக்கு வெளிச்சத்தில் தான் படித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
சைக்கிள் வழங்கி சர்ப்ரைஸ்:
இந்த செய்தியை அறிந்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சித்துக்காட்டில் உள்ள மாணவி நித்திய ஸ்ரீ-யின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்தார். அதோடு, மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கியும், நிதியுதவியும் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, விரைவில் வீட்டிற்க்கு மின் இணைப்பு கிடைத்திடவும், மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக உறுதி அளித்தார். சமூக வலைதளத்தின் மூலம் தகவல் அறிந்து வீட்டிற்கே நேரில் வந்து உதவி செய்த நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலிக்கு மாணவி நித்ய ஸ்ரீ நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை மாணவியின் வீட்டிற்கு புதிதாக சைக்கிள் ஒன்றை நிர்வாகிகள் மூலம் அனுப்பிவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து மாணவி நித்ய ஸ்ரீ தெரிவிக்கையில், ”தினம்தோறும் பள்ளிக்கு நடந்து சென்று வந்த நிலையில், கேட்காமலே நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்கள் சைக்கிள் வழங்கியது இன்ப அதிர்ச்சியை அளிப்பதாகவும், நன்றாக படித்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு அளித்த உறுதியின் படி உயர்கல்வியை எட்டுவேன்” எனவும் மாணவி நித்ய ஸ்ரீ பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






