பக்ரூதின் வழக்குகளை விரைந்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
போலீஸ் பக்ரூதின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், தன்னை தனிமைச் சிறையில் அடைத்துள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சிறைத்துறை அதிகாரிகளை பக்ரூதின் தாக்கியதால் அவர் மீது சட்டத்திற்கு உட்பட்டு சில நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அவரை பழிவாங்கும் நோக்கில் தண்டிக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு
இதையடுத்து, சிறை விதிகளின்படி பக்ருதீனுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அவருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். மேலும், பக்ரூதின் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, தாயாரின் மருத்துவ தேவைக்காக மூன்று நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அது தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறித்தினர்.
இதனிடையே, பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், வழக்கறிஞர்களை காணொலி மூலமாக ஆஜராகி வாதிட அனுமதிப்பதில்லை என்றும், வழக்கறிஞர்கள் உரிய முறையில் நடத்தபடுவதில்லை என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதிகளிடம் முறையிடபட்டது.
மேலும் படிக்க: அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: உத்தரவுப்படி விசாரணை நடத்த வேண்டும்- நீதிபதிகள்
இதையடுத்து பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட அனுமதி வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளுக்கு கழிப்பிடம் மற்றும் தேவையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவும், நிர்வாக பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.
What's Your Reaction?