ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jan 29, 2025 - 18:00
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு
கோப்பு படம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்தார். 

அதனை படித்த நீதிபதிகள், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த விவகாரத்திற்கு பின்னர் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். மேலும், உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்  என்றும் இது அனைவரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என்றும் பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என கூறினர்.

இதனையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட இருந்த வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். உயர் நீதிமன்ற கட்டடத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பை போலவே உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும்  நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஸ்கேனர் வைத்து அனைத்து உடைமைகளையும் பரிசோதிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் ஏற்கனவே உள்ள நுழைவு வாயில்களில் மாற்றம் செய்யாமல் அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டனர். எந்த குறைபாடும் இல்லாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சாதாரண உடையில் காண்கணிப்பு பணியில் ஈடுபட காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போதிய அளவு சிசிடிவி கேமிராக்களை நிறுவ காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் காவல்துறையின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினர். பாதுகாப்பு  சோதனைக்கு கால அவகாசம் எடுக்கும் நிலையில்  முன்கூட்டியே நீதிமன்றத்திற்கு வர வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow