அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: உத்தரவுப்படி விசாரணை நடத்த வேண்டும்- நீதிபதிகள்
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவுபடிதான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெளிவுப்படுத்திய நீதிபதி காவல்துறை எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு வலியுறுத்தினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சமீபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றவாளி ஞானசேகரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தனியாக தான் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே சென்றாரா? வேறு யாரேனும் உடன் வந்தார்களா? வேறு யாருக்கெல்லாம் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்பது குறித்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
7 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து குற்றவாளி ஞானசேகரன் சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஞானசேகரனை போலீசார் பாதுகாப்போடு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு முறையீடு செய்தார்.
விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதாகவும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மீடியா குறித்து எந்த உத்தரவும் இல்லை என்று சுட்டிக்காட்டினார். செய்தியாளர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்டு துன்புறுத்துவதாகவும் இதுகுறித்து தாங்கள் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் சூரியபிரகாசம், காவல்துறை ஆணையர் குறித்த கருத்துக்கள் தொடர்பாகத்தான் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், பத்திரிகையாளர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டதாகவும் அது பற்றி மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறப்பு விசாரணை குழுவை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முதல் தகவல் அறிக்கை பொதுத் தளத்துக்கு வந்த பிறகு அது யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டார்.ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவின்படிதான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெளிவுபடுத்தினார். காவல்துறை எல்லை மீறினால் இது தொடர்பாக ஏதாவது மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
What's Your Reaction?