புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது- விஜய் அதிரடி
கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் குறித்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என விஜய் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் தான் நமது இலக்கு என்று கூறினார். இதையடுத்து, தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்துள்ள விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று அரசியல் கட்சிகள் உன்னிபாக கவனித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக கட்சி உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து, சமீபத்தில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நடைபெற்றது.
இதில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்களை விஜய் நேர்காணல் செய்தார். தொடர்ந்து, இன்று இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விஜய் கலந்து கொண்ட நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
19 மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த பட்டியலை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் 19 பேருக்கும் நியமன ஆணையுடன் இன்றும் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பேசிய விஜய், கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் குறித்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் உரிய நிர்வாக வாய்ப்பையும், பிரதிநிதித்துவத்தையும் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகளை நியமிக்கும் போது கட்சிக்கு வலுசேர்க்கும் தொண்டர்களுக்கு நிர்வாக பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிச்சயமாக வெற்றி பெறும் என்றும், கட்சி நிர்வாகிகள் கட்சிக்கு உண்மையாக நேர்மையாக உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
What's Your Reaction?